உடுமலை:கால்நடைகளுக்கு உலர் தீவனமாக பயன்படுத்த, மக்காச்சோளத்தட்டு, வாங்கி இருப்பு வைக்க, கால்நடை வளர்ப்போர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, மக்காச்சோளம் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது.
சாகுபடியில், தற்போது அறுவடை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. கதிர்களிலிருந்து சோளத்தை பிரித்து, விற்பனை செய்யும் விவசாயிகள் தற்போது, சோளத்தட்டையும், உலர் தீவனத்துக்காக விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.
பால் உற்பத்திக்கு, வளர்க்கப்படும் மாடுகளுக்கு, பசுந்தீவனத்துடன், தவிடு உட்பட பொருட்கள் தீவனமாக அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், உலர் தீவனமான சோளத்தட்டை ஆண்டு முழுவதும் இருப்பு வைத்து, கால்நடைகளுக்கு அளிக்க முடியும்.
எனவே, மக்காச்சோள அறுவடை நடக்கும் பகுதிகளுக்கு சென்று, தட்டை கொள்முதல் செய்ய கால்நடை வளர்ப்போர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கால்நடை வளர்ப்போர் கூறியதாவது: கால்நடைகளுக்கான அனைத்து தீவனங்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், உலர் தீவனங்களை அதிகளவு கால்நடைகளுக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உடுமலை பகுதியில், வைக்கோலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மக்காச்சோள தட்டுகளை வாங்கி இருப்பு வைக்கிறோம். இந்தாண்டு பெரும்பாலான விளைநிலங்களில், இயந்திரங்களை கொண்டு நேரடியாக அறுவடை செய்கின்றனர்.
இம்முறையில், மக்காச்சோள தட்டை 'பேல்'களாக கட்டி பயன்படுத்த முடியும். பருவமழைக்கு பிறகு பசுந்தீவன பரப்பு அதிகரித்துள்ளதால், உலர் தீவனத்துக்கு தட்டுப்பாடு குறைந்துள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.