சென்னை,:மலர்மகன் எழுதிய, 'பொன்விழா நோக்கி இலக்கியவீதி' என்ற நுாலை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் வெளியிட, சேக்கிழார் ஆராய்ச்சி மைய செயலர் சிவாலயம் மோகன் பெற்றுக்கொண்டார்.
நீதிபதி அரங்க.மகாதேவன் பேசியதாவது:
புறநானுாற்றில், 'நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' என்ற வரி வரும். அதற்கு இலக்கணமாகத் திகழ்பவர் இலக்கியவீதி இனியவன். வேடந்தாங்கல் அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து, தமிழகத்தில் கலை, இலக்கிய, சமூக அக்கறையுடன், அவற்றில் தோய்ந்தவர்களைக் கண்டறிந்து, வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்.
இவர், எழுத்தாளர்களைக் கூட்டி நடத்திய மாநாடு பற்றி அறிந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, வெகுவாக அவரை பாராட்டினார்.
இவரின் செயல்கள் அனைத்தும் தாய்மண், தாய்மொழி, மக்கள் என்ற பரந்த நோக்கில் அமைபவை. ராமையாப்பிள்ளை, நடராஜன், கொல்லங்குடி கருப்பாயி, சுப்பு ஆறுமுகம், தாரா பாரதி என பலர், இவரால் வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தவிர, பாரதி, பாரதிதாசன், திரு.வி.க., உள்ளிட்டோருக்கு விழா எடுத்தவர். எழுத்தாளர்களை வளர்த்த எழுத்தாளர். இவர் குடும்பம், பிசிராந்தையாரின் குடும்பத்துக்கு ஒப்பானது.
இவர் வளர்த்த இலக்கியவீதி படைப்பாளிகள், இப்போது தழைத்து ஓங்கி உள்ளனர். அவரைப் பற்றி எழுதிய இந்த நுால், பல சிறப்புகளைப் பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் சுதாசேஷய்யன், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, மரபின்மைந்தன் முத்தையா, 'வானதி' ராமநாதன், இலக்கியவீதி செயலர் துரை.லட்சுமிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement