ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அருகே, கோவில் திருவிழாவில், 'கிரேன்' கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், மூன்று பேர் பலியாகினர். ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில், மண்டியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
கிரேனில் அந்தரத்தில் பறந்து வந்தபடி அம்மனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நேற்றிரவு, 9:00 மணிக்கு நடந்தது.
அப்போது, திடீரென கிரேன் சாய்ந்து விழுந்ததில், அந்தரத்தில் தொங்கியபடி வந்த அப்பகுதியைச் சேர்ந்த பக்தர் ஜோதிபாபு, 17, சம்பவ இடத்திலேயே பலியானார்.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி முத்து, 42; ஐஸ் விற்பனையாளர் கீழ்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன், 35, ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.
மேலும், ஒரு பெண், ஒரு குழந்தை உட்பட ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.