பிறந்தவுடன், பசிக்காக அழக் கற்றோம். நம் தேவைகளுக்காக கேட்க கற்றோம். பின் ஒரு குழுவாக இருந்து, அதன் பயன்கள் என்னவென்று கற்றோம்.
அதன் நீட்சியாக மற்றொரு குழுவின் மேல் எப்படி அதிகாரம் செலுத்துவது என்பதைக் கற்றோம். எப்படி பதுக்கி வைப்பது, பதுக்கி வைத்ததை எப்படி காப்பாற்றுவது என கற்றுக்கொண்டோம்.
விவசாயம் மற்றும் அது சார்ந்த வளர்ச்சியை கற்றோம். ஆனால், அந்த வளர்ச்சியால் இந்த இயற்கை எப்படி மாறுகிறது என்பதை பார்த்த பின், இயற்கையை மனிதனிடமிருந்து எப்படி காப்பாற்றுவது என்பதை கற்றுக் கொண்டிருக்கிறோம்.
இப்படி, படிப்படியாக கற்று, நமக்கான எல்லைக்கோடுகளை உருவாக்கினோம். இந்த கற்றல் யாவும் உடல் சார்ந்த, நிலம் சார்ந்த ஆதிக்க மனப்பான்மையை நமக்கு தந்துவிட்டது.
இதையெல்லாம் பார்க்கும்போது, நாம் கற்றுக்கொண்டதன் அர்த்தமே வேறுபட்டு விடுகிறது.
இன்று, மனிதர்களுக்குள் சமத்துவத்தை ஏற்படுத்துவது எப்படி, பெண்களுக்கு சம உரிமை தருவது எப்படி, இயற்கையை காப்பது எப்படி, அனைத்து ஜீவராசிகளுடன் இணைந்து வாழ்வது எப்படி என்ற நிலையில் இருக்கிறோம்.
நம் மீது, பிறர் மீது, உலகத்தின் மீது நாம் அன்பு செலுத்துவது எல்லாமும் இப்போது நிபந்தனைக்கு உட்பட்டதாக மாறிவிட்டது.இதுதான், நாம் இதுவரை கற்றுக்கொண்டதின் உச்சமாக இருக்கிறது. எனவே, இதுவரை யிலும் கற்றதை துாக்கி எறிந்து, உண்மையான அன்பை கற்றுக் கொள்ள வேண்டும்.
இயற்கையை சீரழிக்காமல், சக மனிதனின் வாழ்க்கையை சீரழிக்காமல் வாழ்வது எப்படி என்ற கற்றலே நமக்கு தேவை.
வாழ்வது எப்படி என்பதை உணர்ந்து, வாழ்வின் மகத்துவத்தை உணர்ந்து கற்போம். உரிமையை சமன்படுத்த கற்போம். கற்றுக்கொள்வதின் பயன் இதில் தான் உள்ளது.
நடிகை ரோகிணி, நந்தனம் புத்தக காட்சியில், 'கற்றலின் பயன்' என்ற தலைப்பில் உரையாடினார்.
Advertisement