ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் விசைத்தறி கூடங்களில் காட்டன் சேலைகள், கலர் வேட்டிகள் உற்பத்தி மீண்டும் முழு வீச்சில் துவங்கியுள்ளது.
இப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள்உள்ளன. 50க்கும் மேற்பட்ட சிறு விசைத்தறிக் கூடங்களிலும், வீடுகளில் சொந்தமாக தறி அமைத்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விசைத்தறி தொழில் செய்து வருகின்றனர். விசைத்தறிகளில் 40, 60, 80ம் நம்பர் காட்டன் ரக சேலைகள், வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் வெளிமாநில விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தினமும் ரூ.10 லட்சம் மதிப்பில் ஜவுளிகள் உற்பத்தியாகின்றன.
கூலி உயர்வு, போனஸ் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பகுதி நெசவாளர்கள் ஜன., 2 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஜன., 18-ல் திண்டுக்கல்லில் தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் கூலி உயர்வு உடன்படிக்கையை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
இதை தொடர்ந்து ஜன., 20 முதல் விசைத்தறி நெசவாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பினர்.
இருபது நாட்களுக்கு பின் விசைத்தறிகளில் ஜவுளி உற்பத்தி மீண்டும் முழு வீச்சில் துவங்கியது. விசைத்தறி கூடங்களில் பணி செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 14 சதவீதமும், ஒப்பந்த விசைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதமும் உயர்ந்த கூலியால் விசைத்தறி நெசவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.