சென்னை, நந்தனத்தில் நடந்து வந்த 46வது புத்தக காட்சியில், பல புத்தகங்களுக்கு வரவேற்பு அதிகம் இருந்தது. அதில் சில புத்தகங்கள் இங்கே:
தொண்டர் குலம்
ஆசிரியர்: ராஜேஷ் பச்சையப்பன்
பக்கம்: 190, விலை: ரூ.230
வெளியீடு: மெட்ராஸ் பேப்பர்
சினிமாவில் உதவி இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு, தன் ஊரை விட்டுக் கிளம்புவோருக்கான கையேடாக உள்ளது. ஏற்கனவே உதவி இயக்குனர்களாக இருப்போரின் அனுபவங்களை இந்நுால் பேசி, சாத்திய, அசாத்தியங்களை அலசுகிறது.
இயற்பியல் கலைச்சொல் அகராதி
ஆசிரியர்: மயிலவேலன்
பக்கம்: 336, விலை: ரூ.360
வெளியீடு:
வனிதா பதிப்பகம்
தமிழக அரசின் விருது பெற்ற நுால். இயற்பியல் மாணவர்களுக்கு சிறந்த கையேடாக விளங்கும்.
நாடு போற்றும்நாட்டுப்புறப் பாடல்கள்
ஆசிரியர்: கோ.பெரியண்ணன்
பக்கம்: 522, விலை: ரூ.500
வெளியீடு: வனிதா பதிப்பகம்
பல கிராமங்களில் அலைந்து, ஓலைச்சுவடிகளிலும் மூத்தோர் மனங்களிலும் பதிந்து கிடந்த நாட்டுப்புறப் பாடல்களை தேடிக் கண்டறிந்து தொகுத்துள்ளார் ஆசிரியர். பாமரர்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் விளக்கும் அருமையான பாடல்களின் தொகுப்பு.
ஆகஸ்ட் 15
ஆசிரியர்: குமரி எஸ்.நீலகண்டன் /சுதாமதி சுப்பிரமணியன்
பக்கம்: 500, விலை: ரூ.650
வெளியீடு: நோஷன் பிரஸ்
குமரி எஸ்.நீலகண்டன் எழுதிய, 'ஆகஸ்ட் 15' என்ற, சுதந்திர வரலாற்று நாவல் பல்வேறு விருதுககைளப் பெற்றது. இது, மலையாளம், ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு வரவேற்பைப் பெற்றது. தற்போது, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வலைப்பூ வழியாக கதை சொல்லும் நடையில், ஒரு தனித்துவமான பாணியில் எழுதப்பட்ட நாவல்.
விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க
ஆசிரியர்: தேனி மு.சுப்பிரமணி
பக்கம்: 288, விலை: ரூ.360
வெளியீடு: தாமரை பிரதர்ஸ்
தகவல் அளிக்கும் தளமாக 'விக்கிப்பீடியா' உள்ளது. இதற்கு பங்களிப்பதற்கு வயது, கல்வி, நாடு, மொழி, சமயம், இனம் என எந்தத் தடையுமில்லை.
விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்கம், விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு என, பல்வேறு பணிகளில் பலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப்போல, நாமும் எப்படி பங்களிப்பு செய்வது என்பது பற்றிய சிறந்த கையேடாக இந்நுால் உள்ளது.
கவிதை பொருள் கொள்ளும் கலை
ஆசிரியர்: பெருந்தேவி
பக்கம்: 168, விலை: ரூ.200
வெளியீடு: எழுத்து
ஆத்மாநாம், நகுலன், அபி, பிரம்மராஜன், சேரன், மனுஷ்யபுத்திரன், திரிசடை, ஞானக்கூத்தன், அரவிந்தன், கிருஷ்ணபிரபு உள்ளிட்டோரின் கவிதைகளைக் கொண்டு, கவிதைகளை எப்படி புரிந்துகொள்வது, கவிமொழி என்ன சொல்கிறது என்பதை விளக்குகிறது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில், சிறுவர்களுக்கான புத்தகங்களை படங்களுடன் வெளியிடும் அமைப்பு, நேஷனல் புக் டிரஸ்ட் இண்டியா நிறுவனம்.இந்நிறுவனம் வெளியிட்ட 'சிங்கமும் முள்ளெலியும், பசுமை வனத்தின் நண்பர்கள், என் வீடு என் உரிமை, கிரீடம் சூடிய கீரிப்பிள்ளை, தாவரங்களின் பரிணாம வளர்ச்சி, குளோன்சியின் சாகசங்கள்' உள்ளிட்ட எண்ணற்ற தலைப்பில் படக்கதை நுால்களை வெளியிட்டுள்ளது.