சென்னை:செம்பாக்கம் ஜி.எம்., செஸ் அகாடமி மற்றும் தமிழ்நாடு சதுரங்க சங்கம் இணைந்து, சென்னை அடுத்த தாம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள, வள்ளுவர் குருகுலம் பள்ளியில், மாநில அளவிலான ஒரு நாள் சதுரங்க போட்டியை நேற்று நடத்தின.
இப்போட்டி 8, 10, 13 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்காக நடந்தது. இரு பாலருக்கும் தனித்தனியாக நடந்த இப்போட்டியில், அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் உட்பட, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என, தமிழகம் முழுதும் இருந்து 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற எட்டு வயதுக்கு உட்பட்டோர் அனைவருக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், சிறுவர்களில் 15 பேருக்கும், சிறுமியரில் 10 பேருக்கும் சிறப்பு பரிசுகள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.