ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகேவுள்ள 109 வயதான பாம்பன் பழைய துாக்கு பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்குவது குறித்து அதிகாரிகள் மவுனம் சாதித்து வருகின்றனர். புதிய ரயில்வே பாலப்பணிகள் முடிந்து அடுத்தாண்டு தான் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்க வாய்ப்புள்ளதாக சில அதிகாரிகள் தெரிவித்தனர்.
1914 பிப்., 24 பாம்பன் கடலில் 2.05 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட்ட ரயில் பாலத்தில் போக்குவரத்து துவங்கியது. இப்பாலம் நடுவில் உள்ள தூக்கு பாலம் வழியாக சரக்கு, கடற்படை கப்பல்கள், மீன் பிடி படகுகள் கடந்து சென்று வருகின்றன. இப்பாலத்தை ரயில்வே பொறியாளர்கள், ஊழியர்கள் பராமரித்து வந்த நிலையில், 5 ஆண்டுகளாக அடிக்கடி தூக்கு பாலத்தின் இரும்பு தூணில் விரிசல் ஏற்பட்டதால், ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு 2020ல் புதிய ரயில் பாலம் கட்டுமான பணியை துவக்கியது.

பாதுகாப்பு ஆணையம் அனுமதி மறுப்பு
கடந்தாண்டு டிச., 23ல் தூக்கு பாலத்தில் உள்ள இரும்பு தூண் பலவீனமாகியதால் பாலத்தில் உள்ள சென்சார் கருவி ரெட் அலர்ட் கொடுத்தது. இதனால் அன்று முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பாலத்தை ஆய்வு செய்த சென்னை ஐ.ஐ.டி., குழு போக்குவரத்தை துவக்க 'க்ரீன் சிக்னல்' கொடுத்தனர்.
ஆனால் 109 வயதான பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்தை துவக்கினால் விபரீதம் ஏற்படலாம் என கருதி ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி மறுத்தது. இதனால் தூக்கு பாலத்தில் மராமத்து பணி நடக்கவில்லை. ராமேஸ்வரத்திற்கு மீண்டும் போக்குவரத்தை துவக்க மறு தேதி கூட அறிவிக்காமல், தெற்கு ரயில்வே அதிகாரிகள் மவுனம் சாதித்து வருகின்றனர். இதன் மூலம் பாலத்திற்கு மறைமுகமாக 'குட் பை' சொல்லி விட்டதாக சில அதிகாரிகள் தெரிவித்தனர்.