தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே, தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்த கமாலுதீன், தமிழகத்தின் பல பகுதியைச் சேர்ந்தவர்களிடம், லட்சக்கணக்கில் முதலீடு பெற்று, டிராவல்ஸ் தொழில் நடத்தினார்.
கடந்த, 2021ல் அவர் இறந்தார். அதன் பின், கமாலுதீன் குடும்பத்தினர், முதலீட்டாளர்கள் பணத்தை வழங்காமல் ஏமாற்றினர்.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் அளித்த புகார்படி, விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், 'கமாலுாதீன் தங்கை மகளுக்கு, சக்கராப்பள்ளியில் திருமணம் நடைபெறுவதால், மண்டபம் முன் முதலீட்டாளர்கள் திரள வேண்டும்' என, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக நேற்று தகவல் பரவியது. ஏ.டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் மற்றும் ரவீந்திரன் தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
அனைத்து சாலைகளும், 'சீல்' வைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, மண்டபம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். முதலீடு செய்த தொகையை திரும்ப வழங்க வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, கமாலுாதீன் சகோதரர்களை கைது செய்ய வேண்டும் என, முழக்கமிட்டனர்.
அங்கு வந்த கும்பகோணம் ஆர்.டி.ஓ., பூர்ணிமா, பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., முத்துக்குமார் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, மூன்று மாதத்துக்குள் விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என, உறுதியளித்தனர். அதன் பின், அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால், தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.