ஆவடி:ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயலில், சரஸ்வதி நகர் பிரதான சாலை உள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இச்சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி, அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
கடந்த பருவ மழையின் போது நிலைமை மேலும் மோசமானது. குறிப்பாக, ஆவடி மேயர் உதயகுமார் தினமும் இந்த சாலை வழியாகத் தான் சென்று வருகிறார். ஆனாலும், சீரமைக்க நடவடிக்கை எடுக்காதது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மழை விட்ட பின் சாலை சீரமைக்க மாநகராட்சி முன் வரும் என்ற மக்களின் நம்பிக்கை, தற்போது ஏமாற்றத்தில் உள்ளது.
இந்த சாலை மேலும் வலுவிழந்து பொத்தலாகும் முன், விரைந்து சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.