ஆர்.கே.நகர்:புதுவண்ணாரப்பேட்டையில், ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி கற்கின்றனர்.
போதிய அளவு வகுப்பறை வசதி இல்லாததால், கல்லுாரி நிர்வாகம் சார்பில், கூடுதல் கட்டடம் கட்ட, கடந்தாண்டு எம்.எல்.ஏ., எபினேசரிடம் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, 2 கோடியே 60 லட்ச ரூபாய் செலவில், 14 வகுப்பறைகள் மற்றும் 'மீட்டிங் ஹால்' கொண்ட மூன்று மாடி கட்டடம் கட்டப்பட்டது.
இதை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன் தினம் திறந்து வைத்தார்.கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், புதிய கட்டடத்தில் எம்.எல்.ஏ., எபினேசர், குத்துவிளக்கேற்றி மாணவ - மாணவியர், பேராசிரியர்களுக்கு இனிப்புகளை வழங்கி, மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் சுடர்கொடி, மண்டலக் குழு தலைவர் நேதாஜி கணேசன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.