செங்குன்றம்:செங்குன்றம் ஜி.என்.டி., சாலையின், 1 கி.மீ., துார தடுப்பில், தனியார் மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு விளம்பர போஸ்டர்களை ஒட்டி, அலங்கோலமாக்கி வைத்துள்ளனர். மேலும், அந்த போஸ்டர்களை வேடிக்கை பார்க்கும், வாகன ஓட்டிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன.
ஆனால், இதை தடுக்கவோ, தடுப்புகளின் ஒட்டிய போஸ்டர்களை அகற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டிய, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம், கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்தது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் போக்குவரத்திற்கு பயன்படும், ஜி.என்.டி., சாலையை துாய்மையாக வைத்திருக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செங்குன்றம் போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி உத்தரவையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜேஷ், எஸ்.ஐ., விவேகானந்தன் மற்றும் போக்குவரத்து போலீசார், ஜி.என்.டி., சாலை தடுப்புகளில் ஒட்டியிருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட போஸ்டர்களை அகற்றும் பணியை, முடுக்கி விட்டுள்ளனர்.
செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே, நேற்று முன்தினம், இந்த பணி துவங்கியது. போஸ்டர்களை முழுமையாக அகற்றி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், சாலை போக்குவரத்து விதிகளுக்கான, 'குறியீடுகள்' வரையவும், முடிவு செய்துள்ளனர்.
அதேபோல், புதிதாக போஸ்டர் ஒட்ட சென்றவர்களை, எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து விதிமீறுவோர் மீது வழக்கு பதிந்து, அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.