கோவை:மேடை பேச்சு என்பது அவ்வளவு எளிதல்ல. நல்ல குரல் வளம், பார்வையாளர்களை எதிர்கொள்ளும் துணிவு மற்றும் அணுகுமுறை, சூழலுக்கும் நிகழ்வின் கருத்துக்கும் ஏற்ப, ஏற்ற, இறக்கத்துடன் கம்பீரம் என சில திறன்கள் இருந்தால் மட்டுமே, ஒருவரின் பேச்சு ரசிக்கப்படும். அத்தகைய திறனை சாதனையாக மாற்றி அசத்தியுள்ளார், கோவை கல்லுாரி மாணவர் கார்த்தி.
கோவை பி.எஸ்.ஜி கல்லுாரியில், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் கார்த்தி, சிறு வயது முதலே பேச்சுப்போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். கதைகள், சரித்திர புத்தகங்களை படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் அவர். நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற ஓர் முயற்சியை மேற்கொண்டார். அதன் படி, 20ம் தேதி காலை, 10:16 மணி முதல் நேற்றுமுன்தினம் காலை 10:16 மணி வரை, தொடர்ந்து தனது பேச்சுத்திறனை பேசி வெளிப்படுத்தினார். நோபல் உலக சாதனை அமைப்பாளர்கள், 24 மணி நேரமும் அவரின் செயல்பாடுகளை கண்காணித்து, சாதனையை அங்கீகரித்து விருது வழங்கி கவுரவித்துள்ளனர்.
'தமிழும் தமிழர்களும்' என்ற தலைப்பில் பேச்சை துவக்கிய அவர், தமிழின் அறிமுகம், அதன் பெருமைகள், மொழியின் சிறப்பு, தமிழர்களின் பாரம்பரியம் ஆகிய விபரங்களை கூறி பின், ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம், பொன்னியின் செல்வன், சிவசாமி சபதம் ஆகியவற்றை முழுமையாக கதையாக விளக்கமளித்தார். ஏற்ற, இறக்கங்களுடன் கம்பீர பேச்சும், தேவையான இடங்களில் நகைச்சுவை பேச்சும் பார்வையாளர்களை தொடர்ந்து இருக்கையில் அமரவைத்தது.
மாணவர் கார்த்தி கூறியதாவது:
பேச்சு மற்றும் புத்தம் வாசிப்பில், எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் இருந்தது. இந்த இரண்டையும் இணைத்து சாதனை முயற்சி மேற்கொண்டேன். இந்நிகழ்வு, கலிக்கநாயக்கன்பாளையம், நாகினி வித்யாலாயா பள்ளியில் நடந்தது.
ஆரம்பத்தில் பேசுவதற்கு எளிதாக இருந்தது. நேரம் செல்ல செல்ல, தொண்டையில் வலி, இறுக்கம் இருந்தது; இருப்பினும் முயற்சியை கைவிடாமல் பேசி முடித்தேன். இதற்கு முன், 23 மணி நேரம் 30 நிமிடம் பேசியதே சாதனையாக பதிவாகியுள்ளது. நான், 24 மணி நேரம் ஒரு நிமிடம் பேசியுள்ளேன். சாதனை முயற்சிக்காக கடந்த ஒரு மாதம் நேர மேலாண்மை சரியாக இருக்க, வீட்டிலேயே பல முறை பேசிப்பார்த்து பயிற்சி எடுத்துக்கொண்டேன்,'' என்றார்.
சாதனை முயற்சி நிகழ்வில், நோபல் உலக சாதனை அமைப்பின் சி.இ.ஓ., அரவிந்த், நாகினி வித்யாலாயா பள்ளி நிறுவனர் சுப்புலட்சுமி, செயலர்கள் பாரதி, திருமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.