சென்னை : பிரதமர் மோடி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, முதல்வர் பூபேந்திர படேலின் அழைப்பில், அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பொங்கல் விழாவில் பங்கேற்க குஜராத் சென்றது தெரிய வந்துள்ளது.
'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவோம்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தார். பின், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டார். இடைத்தேர்தலில், தமிழக பா.ஜ., போட்டியிட்டால், ஆதரிக்கவும் தயார் என்றும் கூறினார்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்திற்கு நேற்று திடீரென, பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., உட்பட, மூன்று பேர் சென்றனர். குஜராத் மாநிலத்தில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், சமத்துவ பொங்கல் விழா நடக்க உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, ஆமதாபாத்திற்கு பன்னீர்செல்வம் சென்றுள்ளார்.
பிரதமர் மோடி தான் அடுத்த பிரதமர் என்று, பன்னீர்செல்வம் தொடர்ந்து பேசி வருகிறார். அதனால், அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சமத்துவ பொங்கல் விழாவிற்கு, பன்னீர்செல்வத்தை அழைக்க வேண்டும் என, குஜராத் முதல்வர் பூபேந்திர படேலிடம், பிரதமர் மோடி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் தான், பன்னீர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், குஜராத்தில் முக்கிய பிரமுகர்கள் சிலரையும், பன்னீர்செல்வம் சந்தித்து பேச உள்ளார். அப்போது அவருக்கு, அரசியல் ரீதியாக சில முக்கிய ஆலோசனைகள், பா.ஜ., மேலிடம் தரப்பில் வழங்கப்பட உள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.