சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.,27ல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக கூட்டணியில் அக்கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டிற்கு, நேற்று (ஜன.,22) முதல்வர் ஸ்டாலின் சென்று சந்தித்தார். இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயம் வந்த இளங்கோவன், அங்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மநீம ஆதரவு?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கோரி அக்கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே ராகுலின் யாத்திரையில் பங்கேற்ற கமல்ஹாசன், காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பார் என தெரிகிறது.
முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'திமுக.,வை பொறுத்தவரை இந்த தொகுதியை காங்.,க்கு ஒதுக்கியதே பெரிய விஷயம். இடைத்தேர்தலில் எனக்காக திமுக.,வினர் ஏற்கனவே பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.
பிரசாரத்திற்கு வருமாறு முதல்வரிடம் வலியுறுத்தினேன். தேர்தலில் ஆதரவு அளித்ததற்காக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தேன். கமலை சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவை கோர உள்ளோம்' எனக் கூறினார்.