எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் 'அந்த' மூன்று நாட்கள் வந்தால் போதும்; பெண்களுக்கு டென்ஷன் எகிறிவிடும். ஒருசிலர் முன்னதாக அறிகுறி தோன்றும் போதே டென்ஷனுக்கான ஓட்டத்தை துவக்கி விடுவர். இந்த குறிப்பிட்ட நாட்களை எளிதாக கடக்கும் வகையில், நாகரிக வளர்ச்சி காரணமாக சானிட்டரி நாப்கின், டாம்பான், மென்ஸ்ட்ருவல் கப் என விதவிதமாக உள்ளன. இருப்பினும், அதில் மென்ஸ்டருவல் கப்பை பயன்படுத்துவது குறித்த தயக்கம், சந்தேகம் பலருக்கும் பலமாகவே உள்ளது.
ஆனால், இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பது மட்டுமின்றி மாதவிடாய் இருப்பது போல் உணர முடியாது என்பது டாக்டர்களின் கருத்து. துவக்கத்தில் ஒருசில முறை சற்று கடினமாக இருக்கலாம். பின்னர் அதைப் பயன்படுத்துவது எளிதானதே. டாக்டர்களால் அங்கீகரிக்கப்பட்ட சிலிகானால் இந்த கப்கள் செய்யப்படுகின்றன. இதில் எந்த திரவத்தை ஊற்றினாலும் இந்த கப் அதனை உரிஞ்சாது, வினைபுரியாது என்பதால், இது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாகும்.
ஸ்மால், மீடியம், லார்ஜ் என பல விதமாக மென்ஸ்ட்ருவல் கப்கள் கிடைப்பதால், அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். கொதிக்கும் தண்ணீரில் ஓரிரு நிமிடங்கள் கப்பை போட்டு நன்றாக கழுவி சுத்தப்படுத்தவும். அதேபோல் கைகளையும் தண்ணீரில் கழுவவும். குறிப்பாக நக இடுக்குகளில் அழுக்குகள் எதுவும் இல்லாதவாறு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
![]()
|
இவை சிலிகான் கப்கள் என்பதால் மென்மையாகவும், வளையும் தன்மையுடனும் இருக்கும். கைகளை சுத்தமாக கழுவிவிட்டு சுத்தம் செய்த கப்பை ஆங்கில எழுத்தான 'சி' வடிவத்தில் வளைத்து மடித்து வஜைனா வழியாக, கர்ப்பப்பை வாய் பகுதியின் உட்புறத்தில் செலுத்த வேண்டும். செலுத்திய பிறகு மென்ஸ்ட்ருவல் கப் தானாகவே இயல்பு நிலைக்கு வந்துவிடும். ஒரு காலை சற்று உயர்த்திய நிலையிலோ அல்லது படுத்தவாறோ இதை செருகுவது எளிதானது.
கப் உள்ளே சரியான நிலையில் இருந்தால், நாம் அசவுகரியமான நிலையை உணர மாட்டோம். சரிவர பொருந்தாவிட்டால் கசிவு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. அதேப்போல் எட்டு மணி நேரம் கழித்து வெளியில் எடுக்கும் போது கப்பின் கீழ் பகுதியில் உள்ள சிறிய கூம்பு பகுதியை பிடித்து இழுக்க முயற்சிப்பர். இது தவறான முறை. கப்பின் அடிப்பகுதியில் இரு விரல்களால் சிறிதளவு அழுத்தம் கொடுத்துதான் இழுக்க வேண்டும். அப்போதுதான், அதன் வாய் பகுதியை சிறியதாக மாற்றி, எளிதாக வெளியில் எடுக்க முடியும். அடிப்பகுதியை பிடித்து இழுக்கும் போது சரியாக வராமல் அடுத்தடுத்து முயற்சிப்பதால் வலி உண்டாக வாய்ப்புள்ளது. எனவே, முன்னதாகவே டாக்டர்களிடம் பயன்படுத்தும் முறை குறித்து ஆலோசனை பெறலாம்.
பயன்படுத்திய கப்பை மீண்டும் சூடான தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து சுத்தம் செய்து, ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி வைக்கலாம். பல மாதம் அல்லது ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக இதை பயன்படுத்தலாம். சில முறை கப்பை பயன்படுத்திய பின்னர், சவுகரியமாக பலரும் உணருவதால், உடலில் பொருத்தியதை எடுக்க ஒருசிலர் மறந்து விடுவர். எனவே, கவனமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை எடுத்து விட்டு வேறு கப்பை மாற்றி விட வேண்டும். நீளமான நகங்களை வைத்திருப்பவர்கள் பொருத்தும் போது கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நகம் படுவதால், புண் உண்டாகி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதை இளம்பெண்கள், நடுத்தர வயதினர் என வயது வித்தியாசமின்றி அனைவரும் பயன்படுத்தலாம்.