வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தலுக்காக வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, 'தேர்தல் தொடர்பாக இதுவரை அறிவிப்பு வரவில்லை என்றும், தைரியம் இருந்தால் தேர்தலை அறிவியுங்கள்' எனவும், ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி மற்றும் பா.ஜ.,வுக்கு சவால் விடுத்தார்.
சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. கடந்த ஆண்டு நடந்த அந்தேரி தொகுதி இடைத்தேர்தலின் போது 2 பிரிவினரும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என முறையிட்டனர். இதையடுத்து தேர்தல் கமிஷன் சிவசேனாவின் கட்சி பெயர், சின்னத்தை முடக்கியது.
அதன் பிறகு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா என்ற பெயரில் தீப்பந்தம் சின்னத்துடன் உத்தவ் தாக்கரே தலைமையிலும், பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயரில் வாள், கேடயம் சின்னத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலும் அந்த கட்சி செயல்பட்டு வருகிறது.
தற்போது யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான விசாரணை தேர்தல் கமிஷனில் நடந்து வருகிறது. விசாரணையில் இருதரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன. ஜனவரி 30ம் தேதி வரை எழுத்து பூர்வமான வாதங்களை வைக்க தேர்தல் கமிஷன் அவகாசம் வழங்கி உள்ளது.
இந்தநிலையில் சிவசேனா தலைவராக உத்தவ் தாக்கரேவின் பதவிக்காலம் இன்றுடன் (ஜன.,23) முடிகிறது. எனவே கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா சார்பில் தேர்தல் கமிஷனில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் தேர்தல் கமிஷன் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மும்பை மாநகராட்சி தேர்தலுக்காக உத்தவ் தாக்கரே கட்சி, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் உத்தவ் தாக்கரே கூறியதாவது:
ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்., உள்ளிட்ட கட்சிகளும் இணையும் என நம்புகிறோம். நாடு எதேச்சதிகாரத்தை நோக்கி செல்கிறது.
தேர்தல் தொடர்பாக இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை. ஷிண்டே மற்றும் பா.ஜ., அணியினருக்கு சவால் விடுக்கிறேன். தைரியம் இருந்தால் தேர்தலை அறிவியுங்கள். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மசூதி சென்றதால் அவர் ஹிந்துத்துவாவை விட்டு வெளியேறியதாக கருத முடியுமா?
பா.ஜ., - பிடிபி உடன் கூட்டணி அமைத்ததால் ஹிந்துத்துவாவை விட்டு வெளியேறிவிட்டதா? அவர்கள் என்ன செய்தாலும் சரி, அதுவே நாங்கள் செய்தால் சரியல்ல, ஹிந்துத்துவாவை விட்டு வெளியேறிவிட்டதாக கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.