ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக ஈ.வி.கே.சம்பத்தின் இளைய மகனான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதைப் பார்த்த மாத்திரத்தில் 40 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடின.
அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில் எந்தவித பொறுப்பும் இல்லாத நிலையிலும் கூட அக்கட்சியின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்திய ஒருவர் இருந்தார். அவர் பெயர் அனந்தசாமி. அவரைத் தமிழக காங்கிரஸில் உள்ள எந்த தலைவருக்கும் பிடிக்காது. எனவே அவரின் வாழ்விடத்தை வைத்து, அவரை 'ஆழ்வார்பேட்டை அனந்தசாமி' என்று தொண்டர்கள் கேலியும் கிண்டலுமாகக் குறிப்பிடுவது வழக்கம்.
காங்கிரசில் பொதுத்தேர்தலோ இடைத்தேர்தலோ எது வந்தாலும் சரி.. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை அறிவிப்பவராக இருந்தவர்தான் ஆழ்வார்பேட்டை அனந்தசாமி. காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான தலைமையோடு நெருக்கம் வைத்து வாழ்ந்து வந்தவர் அனந்தசாமி.
தேர்தல் சமயங்களில் மட்டுமே தலை காட்டுவார். அத்யாவசியமான முடிவுகளை காங்கிரஸ் எடுக்கும்போது அவர் தென்படுவார். இதர நேரங்களில் அவர் தேடினாலும் கிடைக்காத மர்ம மனிதராகவே வாழ்ந்து வந்தார்.

ஆழ்வார்பேட்டை அனந்தசாமி திடீரென்று சத்தியமூர்த்தி பவனுக்கு வருகிறார் என்றால் கட்சிப் பிரமுகர்கள் பீதியில் பிதற்றுவார்கள். கிலி பிடித்துக் கலங்குவார்கள். பல சமயங்களில், கட்சித் தொண்டர்களுக்கோ தலைவர்களுக்கோ உடன்பாடு இல்லாத முடிவுகளைப் போகிற போக்கில் அறிவித்து விட்டு சென்றுவிடுவார். இதனால் அவரின் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்துக் கிளம்பி வருவது என்பது வாடிக்கையாகவே இருந்தது.
ஒரு சமயம் சத்தியமூர்த்தி பவனிலேயே காங்கிரஸ் தொண்டர்கள் அவரை அடித்து, உதைத்துச் சட்டையைக் கிழித்து விட்டார்கள். ஆனால் அவரோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், தன்னுடைய ஆளுமைப் பணிகளை அடுத்தடுத்து செய்து கொண்டே இருந்தார். வாழும் காலம் வரையிலும் அவர் காங்கிரஸ் கட்சியின் தமிழக ஆளுமையாகவே இருந்து மறைந்தார்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அந்த காலத்தில் கட்சிக்கே சம்பந்தமில்லாத ஒருவர் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பது என்ற நிலை இருந்ததைக் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல., இதர கட்சித் தலைவர்கள் கூட விசனத்தோடு விமர்சனம் செய்த வரலாறு தமிழக காங்கிரசுக்கு உண்டு.
- ஆர்.நூருல்லா, ஊடகவியலாளர்
9655578786