எஸ்.மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல் வா(வியா)திகள் அனைவரும், 'பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த, புலவர் பெருமான்கள்' என்பதை, நாம் அனைவரும் அறிவோம். ஆனால், ஜம்மு - -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, நாட்டில் உள்ள எல்லா அரசியல்வாதிகளையும் விழுங்கி ஏப்பம் விடும் அளவுக்கான, ஒரு பொய்யை அரங்கேற்றி உள்ளார்...
அதாவது, காங்கிரஸ் - எம்.பி., ராகுலின் ஒற்றுமை யாத்திரை, தற்போது, ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. லகான்பூர் என்ற இடத்தில் நடைபெற்ற யாத்திரையில், ராகுலுடன் பங்கேற்ற பரூக் அப்துல்லா, 'ஆதிசங்கரருக்கு பின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, பாதயாத்திரை மேற்கொண்டவர் ராகுல் தான்' என பாராட்டியுள்ளார்.
அத்துடன், 'ராகுல் நடத்தும் யாத்திரையின் நோக்கம், இந்தியாவை ஒன்றுபடுத்துவதே. இந்த யாத்திரையின் எதிரிகள், நம் நாட்டின் எதிரிகள், மனிதநேயத்தின் எதிரிகள் மற்றும் மக்களின் எதிரிகள்' என்றும் பேசியுள்ளார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, ஆதிசங்கரர் பாதயாத்திரையாக காடுகளின் வழியாக நடந்து வந்தபோது, கூடவே, பாதுகாப்புக்காக, பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய, 'கேரவன்' வாகனம் வந்ததா அல்லது கால்களில் கேன்வாஸ் ஷூ அணிந்தபடி அவர் நடந்து வந்தாரா அல்லது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ பவனி வந்தாரா... புருடா விடுவதற்கும், புளுகுவதற்கும் ஒரு அளவு இல்லையா... என்ன கொடுமை இது?
ஹிந்து மத தத்துவத்தை, பாரதம் முழுக்க பரப்பவே, பாதயாத்திரை மேற்கொண்டார் ஆதிசங்கரர்; ராகுல் என்ன தத்துவத்தை பரப்ப பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்... இழந்த மகுடத்தை மீண்டும் அடைந்திடத்தானே? ஆதிசங்கரரும், ராகுலும் ஒன்றா... என்ன அக்கிரமம் இது? இதற்கு மேலாக, முத்தாய்ப்பாக மற்றொரு புருடாவும் விட்டிருக்கிறார், பரூக் அப்துல்லா...
அதாவது, 'மஹாத்மா காந்தி மற்றும் ராமபிரானின் இந்தியாவில், நாம் அனைவரும் ஒன்றாகவே இருந்தோம்' என்று கலாய்த்து இருக்கிறார். ஒன்றாக இருந்த இந்தியாவை பிரித்து, பாகிஸ்தான் (கிழக்கு), பாகிஸ்தான் (மேற்கு) என்று பங்கு போட்டு கொடுத்தது யார்... கே.பி.ஹெட்கேவரா, பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சேவா, கணேஷ் தாமோதர் சாவர்க்கரா... இல்லை விநாயக் தாமோதர் சாவர்க்கரா அல்லது தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ., கட்சியா? நாட்டின் பிரிவினைக்கு காரணமாக இருந்தது, காங்கிரஸ் கட்சி தானே.
ஜம்மு - -காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லாவின் பேச்சு எப்படி இருக்கிறது என்றால், ஆடு, மாடுகளை வெட்டி கறி வியாபாரம் செய்யும் கசாப்புக் கடைக்காரன் அஹிம்சையை பற்றி, 'லெக்சர்' எடுப்பது போலுள்ளது. ஒற்றுமையாம்... தேசப் பாதுகாப்பாம்...!
பொய்க்கான டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்கே!
கே.மணிவண்ணன்,
கோவை யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., அரசு
பதவியேற்று, ௨௦ மாதங்களாகி விட்டது. இந்த ஆட்சியில், பெரிய அளவில் சொல்லிக்
கொள்ளும்படியான திட்டம் எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி, சட்டசபை தேர்தலின்
போது அளித்த, ௫௦௫ வாக்குறுதிகளில், 30ஐ கூட உருப்படியாக நிறைவேற்றவில்லை.
ஆனாலும்,
செல்லும் இடங்களில், சற்றும் நா கூசாமல், '௮௦ சதவீத வாக்குறுதியை
நிறைவேற்றி விட்டோம்' என, இமாலய பொய் சொல்கிறார், முதல்வர் ஸ்டாலின்.
குடும்ப
தலைவியருக்கு, மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை; சமையல் எரிவாயு
சிலிண்டருக்கு, ௧௦௦ ரூபாய் மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைப்பு;
மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுப்பு என்பது போன்ற, நடுத்தர மற்றும்
கீழ்த்தட்டு மக்களின் முக்கிய பிரச்னைகள் எதுவும், ௨௦ மாத ஆட்சியில்
தீர்க்கப்படவில்லை.
பால் மற்றும் பால் பொருட்கள் விலையும், தாறுமாறாக உயர்ந்து உள்ளது.
அரசு
அலுவலகங்களில், கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை, லஞ்சம் தலை
விரித்தாடுகிறது. கோவை கார் குண்டு வெடிப்பு, வழிப்பறி, கொலை, கொள்ளை
அதிகரிப்பு, கூட்டு பலாத்காரம், நில அபகரிப்பு என, தமிழகத்தின் சட்டம் -
ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
இந்த லட்சணத்தில், 'தமிழகம் அமைதி
பூங்காவாக திகழ்கிறது' என்று எழுதிக் கொடுத்து, கவர்னரை படிக்கச் சொன்னால்,
அவர் எப்படி படிப்பார்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை
உயர்த்திய பின், காலம் தாழ்த்தி, 4 சதவீத அகவிலைப்படியை முதல்வர்
அறிவித்துள்ளார்; அதுவும், ஜனவரி முதல் ஆறு மாத அகவிலைப்படிக்கு பட்டை
நாமம் போடப்பட்டு உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் நிலையோ அந்தோ
பரிதாபம்.
இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து, மக்களை திசை திருப்பவே,
தமிழகம் - தமிழ்நாடு பெயர் பிரச்னை, செத்து போன சேது சமுத்திர திட்ட
விவகாரம், கவர்னருடன் தேவையற்ற மோதல், அவரை தரக்குறைவாக விமர்சிப்பது
போன்றவற்றை கையில் எடுத்து உள்ளது, திராவிட மாடல் அரசு. இந்த அரசுக்கு,
கூட்டணி கட்சிகளும், 'ஜால்ரா' தட்டுகின்றன; தட்டிக்கேட்டால் வரும்
தேர்தலில், 'சீட்' குறைந்து விடுமோ என, அஞ்சுகின்றன.
மக்கள் பிரச்னைகளை பற்றி கவலைப்படாமல், அவற்றை மனதில் கொள்ளாமல், தொடர்ந்து பொய்யுரைத்து வருகிறார், முதல்வர் ஸ்டாலின்.
'உண்மை
உறங்கச் சென்றால், பொய் ஊரை சுற்றி வந்து விடுமாம்' என்ற சொலவடைக்கு ஏற்ற
படி செயல்பட்டு வருகிறார். உலக அளவில் பொய் சொல்பவர்களுக்கு, டாக்டர்
பட்டம் என்று சொன்னால், ஸ்டாலின் தான் அதில் முதலிடம் பிடிப்பார்.
முதல்வர் கவனிப்பாரா?
ஏ.அஸ்மாபாக்
அன்வர்தீன், ராமநாதபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, பல ஊர்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு வீர
விளையாட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு, கார், பைக் போன்ற
பரிசுகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சிகளில், அரசு சார்பில்
அமைச்சர்கள் பங்கேற்று, வீரர்களை ஊக்குவிப்பது பாராட்டுக்கு உரியது; ஆனால்
பரிசுகளும், பாராட்டுகளும் நிரந்தரமாக நிலைக்கக் கூடியவை அல்ல.
ஜல்லிக்கட்டில்
வெற்றி பெற்று, முதல் இடத்தை பிடித்த வீரர்களுக்கு, தமிழக அரசு பணி
வழங்கி, அவர்களின் எதிர்காலத்தை பிரகாசிக்கச் செய்ய முதல்வர் ஸ்டாலின்
முன்வர வேண்டும். வீரர்களின் கல்வித்தகுதி அடிப்படையில், அரசு வேலை வழங்க
முடியும்.
ரயில்வே, வங்கிகள், பெரிய வணிக நிறுவனங்கள் போன்றவை,
பிரபல விளையாட்டு வீரர்களை தத்தெடுத்து, பணி வழங்கி, அவர்களுக்கு பெருமை
சேர்ப்பதை போல, தமிழக அரசும் அதை பின்பற்றினால், இவ்வீரவிளையாட்டில்
பங்குபெறும் இளைஞர்களை, அது ஊக்கப்படுத்தும் வகையில் அமையும். முன்வருவாரா
முதல்வர் ஸ்டாலின்?