ஜனவரி 24, 1924
கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம், விராஜ்பேட்டையில், கொனெரா பெல்லியப்பாவின் மகளாக, 1924ல், இதே நாளில் பிறந்தவர், சி.பி.முத்தம்மா. வனத்துறை அதிகாரியாக இருந்த இவரின் தந்தை, இவரின் ஒன்பதாவது வயதில் இறந்தார். பின், தாயின் அரவணைப்பால், சென்னை கிறிஸ்துவ கல்லுாரி, மாநிலக் கல்லுாரிகளில் படித்து, ஆங்கில இலக்கியம் முடித்தார். வெளியுறவுத் துறையில் பணியாற்ற திட்டமிட்டார்.
அப்போது, குடிமைப்பணி தேர்வில் பெண்கள் தேறினால், 'திருமணத்துக்கு முன் அனுமதி பெற வேண்டும். குழந்தை பெற விடுப்பு எடுத்தால் விலக வேண்டும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடையாது' என்ற விதிமுறைகள் இருந்தன. கடுமையாக போராடி, ஐ.எப்.எஸ்., தேர்வில் வென்று, நாட்டின் முதல் பெண் வெளியுறவுத் துறை அதிகாரியானார்.
பாகிஸ்தான், மியான்மர், பிரிட்டன் மற்றும் நெதர்லாந்தில், இந்திய துாதரக அதிகாரியாக பணியாற்றினார். பதவிகளில் பாலின சமத்துவத்துக்காக வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில், நீதிபதி கிருஷ்ணய்யர் நியாயமான தீர்ப்பு வழங்கினார். தன், 15 ஏக்கர் டில்லி நிலத்தை, ஆதரவற்றோர் இல்லத்துக்காக அன்னை தெரசாவிடம் வழங்கிய முத்தம்மா, ௨௦௦௯ அக்டோபர் ௧௪ல், தன், 85வது வயதில் மரணம் அடைந்தார்.
குடிமை பணிகளில் பெண்கள் அமர, சிம்மாசனம் தந்த புரட்சிப் பெண் பிறந்த தினம் இன்று!