சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 'பியூச்சர் டேலன்ட்ஸ் - டி20' கிரிக்கெட் போட்டி, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. கல்லுாரிகளுக்கு இடையிலான இப்போட்டியில், மொத்தம் 16 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று காலை நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில், பச்சையப்பா மற்றும் எஸ்.ஆர்.எம்., கல்லுாரி அணிகள் மோதின. மழை காரணமாக, ஓவர்கள் குறைக்கப்பட்டு, 16 ஓவர்களில் போட்டி நடத்தப்பட்டது.
'டாஸ்' வென்று முதலில் களமிறங்கிய, பச்சையப்பா அணி, 16 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஐந்து விக்கெட் இழந்து, 150 ரன்கள் குவித்தது.
அணியின் வீரர் ரஞ்சித்குமார், 34 பந்துகளில் நான்கு சிக்சர் மற்றும் பவுண்டரி என, 52 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்தார். அதேபோல், சஞ்சய் 40 ரன்கள் அடித்தார்.
அடுத்து பேட் செய்த, எஸ்.ஆர்.எம்., அணி, 15.5 ஓவர்களில், எட்டு விக்கெட் இழந்து, 154 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
பச்சையப்பா வீரர் காளீஸ்வரன், நான்கு ஓவர்கள் வீசி, மூன்று விக்கெட் எடுத்து, 29 ரன்களை கொடுத்தார். அதேபோல, அன்புமணி, மூன்று ஓவர்கள் வீசி, இரண்டு விக்கெட் எடுத்து, 25 ரன்களை கொடுத்தார்.
இதையடுத்து, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
முன்னதாக நடந்த போட்டிகளில், விவேகானந்தா, லயோலா ஆகிய இரண்டு அணிகள் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.
இன்று முதல், அரைஇறுதிப் போட்டிகள் துவங்குகின்றன.