கோவை:வரும், 26ல் குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில், 2023-24ம் ஆண்டுக்கான தேவை மற்றும் பணிகளை தொகுத்து, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில், 228 ஊராட்சிகள் உள்ளன. நான்கு மாதத்துக்கு ஒருமுறை, அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். வரும், 26ல் குடியரசு தின விழாவையொட்டி, கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக பொதுமக்கள் வர வேண்டும் என்பதற்காக, கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் குறித்து, முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் கடந்தாண்டு மேற்கொண்ட தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்; செலவின அறிக்கை படிக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் செய்த பணிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும். நெகிழியை முழுமையாக தடை செய்வதோடு, பயன்படுத்தும் வணிக வளாகங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
பொது இடங்களில் குப்பை இல்லாமல் இருப்பதையும், திறந்தவெளியில் மலம் கழிக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். குப்பையில் உரம் தயாரிக்கும் மையம் இருப்பின், அதன் செயல்பாடுகளை தணிக்கை செய்ய வேண்டும்.
அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்பு தொடர்பாக விளக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொது கட்டடங்களுக்கு குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் வினியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வரும், 2023-24ம் நிதியாண்டுக்கு தேவையான பணிகள், வசதிகளை தொகுத்து கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்க வேண்டும். இதை கிராம வறுமை குறைப்பு திட்டம், கிராம வளர்ச்சிக்கான சுகாதார திட்டம், நிறைவான குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என, அனைத்து ஊராட்சிகளுக்கும், கலெக்டர் சமீரன் அறிவுரை வழங்கியுள்ளார்.
கிராம சபை போல், மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் நகர சபை கூட்டங்கள் நடத்த, தமிழக அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில், உள்ளாட்சிகள் தினமான, நவ., 1ல் முதல் கூட்டம் நடத்தப்பட்டது.குடியரசு தினத்தையொட்டி, வரும், 26ல் மீண்டும் நகர சபை கூட்டம் நடத்த வேண்டுமா என்கிற குழப்பம், மாநகராட்சி அதிகாரிகளிடம் நிலவுகிறது. கவுன்சிலர்கள் தலைமையில் இக்கூட்டம் நடத்துவதற்கு அதிகாரிகள் மத்தியில் ஆர்வம் இல்லாத சூழல் காணப்படுகிறது. உள்ளாட்சி துறையில் இருந்தும் அறிவுறுத்தல் வராததால், நகர சபை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் இருக்கின்றனர்.