சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையிலான, ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர், கடந்த மாதம், 26ல் துவங்கியது. மொத்தம் 86 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
போட்டிகள், சென்னை, திருச்சி, விழுப்புரம், கோவை உட்பட 15 மாவட்டங்களில் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டன. முதல் பகுதி, ஜன., 10 வரை நடந்தது.
சென்னையில் மட்டும் 18 பள்ளி அணிகள் பங்கேற்று, பி.எஸ்.பி.பி., - ராமச்சந்திரா பப்ளிக் பள்ளிகள் வெற்றி பெற்று, இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றன.
அதேபோல, பிற மாவட்டங்களில் தேர்வான ஆறு அணிகளுக்கான போட்டி, நெல்லையில் இம்மாதம் 18ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
அன்று நடந்த தொடரின் இறுதிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த ராமச்சந்திரா மற்றும் பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளிகள் மோதின.
முதலில் களமிறங்கிய ராமச்சந்திரா பள்ளி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழந்து, 134 ரன்கள் அடித்தது. அணியின் வீரர் விரிஷாங்க் கார்த்திக் - 43, பாலமுருகன் - 32 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து பேட் செய்த, பி.எஸ்.பி.பி., பள்ளி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஒன்பது விக்கெட் இழந்து, போராடி, 130 ரன்கள் அடித்தது.
நான்கு ரன்கள் வித்தியாசத்தில், ராமச்சந்திரா பள்ளி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.
சிறந்த ஆட்டநாயகனாக விரிஷாங்க் கார்த்திக், சிறந்த பந்து வீச்சாளராக, பி.எஸ்.பி.பி., அணி பிரணவ் குமார், போட்டியின் சிறந்த வீரருக்கான விருது, பி.எஸ்.பி.பி., வீரர் ஓம் நிதீனிக்கு வழங்கப்பட்டது.