சென்னை, தமிழ்நாடு வாலிபால் சங்கம் ஆதரவுடன், சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னையில் நேற்று கோலாகமாக துவங்கின.
போட்டிகள், நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கம் என, இரண்டு இடங்களில், வரும் 27ம் தேதி வரை தொடர்ந்து நடக்கின்றன.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து 58 பள்ளி அணிகள் உட்பட மொத்தம் 88 அணிகள் பங்கேற்றுள்ளன.
போட்டிகள் அனைத்து 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் தொடர்ந்து நடக்கின்றன.
நேற்று மாலை 5:00 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கில் துவங்கிய முதல் நாள் போட்டியை, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி துவங்கி வைத்தார். நிகழ்வில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள், சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.