'முடியெட்டு' என்பது, கேரளா மாநிலத்தின் ஒரு பாரம்பரிய நடன நாடகம். இந்த நாட்டுப்புற நடன நாடகமானது, காளி தெய்வத்திற்கும், தாருகன் என்ற அரக்கனுக்கும் இடையிலான போரின் புராணக் கதையைக் கூறுகிறது.
'யுனெஸ்கோ'வின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த நாட்டிய நாடகமானது, கேரளாவில் பரவலாக நடத்தப்படும் முக்கிய நடனங்களில் ஒன்று.
சடையை விரித்தபடி, சிவந்த கண்களுடன் கையில் அரிவாள் போன்ற ஆயுதத்தை ஏந்தியபடி, காளி உக்கிரத்துடன் மேடைக்கு வந்ததும் செண்டை மேளமும், தாளமும் உச்ச ஸ்தாயிக்குச் செல்கின்றன.
தன் கையில் உள்ள ஆயுதத்தை சுழற்றியபடி, மேடையில் மட்டுமின்றி பார்வையாளர்கள் அருகிலும் சென்று நடனமாடும் 'காளி'யை, அச்சமும் வியப்பும் கலந்த உணர்வுடன் பார்வையாளர்கள் ரசித்து மகிழ்ந்தனர்.
ஒரு மணி நேரம் நடந்த இந்த நாட்டிய நாடகத்தில் நடித்தவர்கள் அனைவரும் ஆண்களே. இந்த நாட்டிய நாடகத்தில் வசனமே கிடையாது.
மேலும் காளி, அசுரன் தவிர, பார்வையாளர்களை சிரிக்க வைக்க கோமாளியும் உண்டு.
இதற்கான ஒப்பனை கலைஞர்கள், கதக்களி நடனத்திற்கு போடுவது போல நீண்ட நேரம் ஒப்பனை செய்தனர். அதிலும் காளி வேடமிடுபவருக்கு, இரண்டு மணி நேரத்திற்கு மேலாக முக ஒப்பனை செய்யப்பட்டது.
பல மாநிலங்களில் உள்ள சிறப்புமிக்க நடனங்களை, சம்பந்தப்பட்ட கலைஞர்களை அழைத்து, அவர்களின் கலை நிகழ்ச்சியை அளித்து வரும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள தட்சிண் சித்ரா கலைக்கூடத்தில் நடந்த இந்த நடன நாடகத்தைக் காண, திரளான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.