ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலையில், நாய் இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையம், இந்தாண்டு இறுதியில் இருந்து செயல்பட உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து இனக்கட்டுப்பாடு செய்யும் பணி, மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறையின் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவை பிடிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் புளியந்தோப்பு, கண்ணம்மாப்பேட்டை, வேளச்சேரி மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட லாயிட்ஸ் சாலை பகுதிகளில் உள்ள நாய் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு கால்நடை மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், லாயிட்ஸ் சாலையில் உள்ள மையம் சிதிலமடைந்ததால், புதிதாக கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டு இறுதியில் இருந்து, புதிய மையம் செயல்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
லாயிட்ஸ் சாலையில் புதிதாக கட்டப்படும் மையத்தால், வழக்கமான பணியில் எந்த மாறுதலும் இல்லை.
மாநகரம் முழுதும் நாய்கள் பிடிக்கப்பட்டு, இதர மையங்களில் வழக்கம் போலவே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சோழிங்கநல்லுார் மற்றும் மீனம்பாக்கம் பகுதிகளில் விரைவில் புதிய அறுவை சிகிச்சை மையங்கள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.