சென்னை சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்த், 37; தனியார் நிறுவன விற்பனை நிர்வாகி. இவர், 2015 ஆக., 25ல், ஆம்னி பேருந்தில் சென்னையை நோக்கி பயணித்தார்.
அப்போது, திருச்சியில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பஸ் மீது, அரவிந்த் பயணம் செய்த ஆம்னி பேருந்து மோதியது. இதில், படுகாயம் அடைந்த அரவிந்த், மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், அரவிந்த் இறப்புக்கு 3.50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், அவரது தாய், மனைவி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி தங்கமணி கணேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:
அதிவேகம், அஜாக்கிரதையாக ஆம்னி பேருந்தை அதன் டிரைவர் இயக்கியதே, விபத்துக்கு காரணம். எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 1 கோடியே 40 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், 'ஐ.சி.ஐ.சி.ஐ., லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்' வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.