மயிலாப்பூர், மயிலாப்பூர், கால்வாய் கரை சாலையை, 'பார்' ஆக மாற்றியுள்ள 'குடி'மகன்களால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மயிலாப்பூர், கால்வாய் கரை சாலைப் பகுதியில், ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த சாலையில், இரண்டு 'டாஸ்மாக்' கடைகள் இயங்கி வருகின்றன.
இதில், ஒரு கடையில் மட்டும் 'பார்' வசதி உள்ளது. இங்கு மதுபானம் வாங்கும் ஒரு சிலர் மட்டும், இந்த பாரை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், இந்த இரு கடைகளிலும் மதுபானம் வாங்கும் பெரும்பாலானோர், அதை கடையின் வெளியே வைத்து, சாலையிலே குடித்து வருகின்றனர்.
சாதாரண நாட்களை விட விடுமுறை தினங்களில், இந்த சாலையில் குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இங்கு மது குடிப்பவர்கள் சிலர் போதையில், சாலையில் செல்பவர்களிடம் வம்பிழுப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் இவ்வழியாகச் செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள், தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
இந்த பிரச்னை பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த சாலையை, மது குடிப்பவர்கள் 'பார்' ஆகவே மாற்றி விட்டனர். இங்கு குடிப்பவர்கள், பாட்டிலை சாலையிலேயே போட்டு உடைக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, நொறுக்கு தீனி சாப்பிட்டுவிட்டு போடும் குப்பையால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பலர் அங்கேயே வாந்தி எடுத்து அட்டூழியம் செய்கின்றனர்.
இதனால் இந்த சாலையில், மாலை மற்றும் இரவு நேரங்களில், பெண்கள், முதியவர்கள் நடந்து செல்ல அச்சப்படும் சூழல் உள்ளது. போலீஸ் அதிகாரிகள் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.