மாதவரம், சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் பாலன், 52; லாரி டிரைவர். அவர் கடந்த டிச., 24ம் தேதி இரவு, வடசென்னையில் இருந்து, லாரியை தாம்பரத்திற்கு ஓட்டிச் சென்றார். அப்போது, சிறிது ஓய்வுக்காக மாதவரம், 200 அடி சாலை, ரவுண்டானா மேம்பாலம் அருகே லாரியை நிறுத்திவிட்டு துாங்கினார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரை எழுப்பி, கத்தியை காட்டி மிரட்டி, அவரது மொபைல் போனை பறிக்க முயன்றனர்.
அவர், அவர்களை எதிர்த்தார். அதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கத்தியால் அவரது தலையில் அடித்துவிட்டு தப்பினர். காயமடைந்த அவர், மாதவரம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின்படி போலீசார், மாதவரத்தை சேர்ந்த நவீன், 19, என்பவரை, மறுநாள் கைது செய்தனர். இதில், ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த அவரது நண்பர் சரத்குமாரை, நேற்று காலை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 'பல்சர்' ரக இரு சக்கர வாகனம், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.