ஆதம்பாக்கம், ஆலந்துார் மண்டலம், 163வது வார்டு, ஆதம்பாக்கம், கிழக்கு கரிகாலன் தெருவில் அமைந்துள்ளது மாநகராட்சி குளம்.
சுற்று வட்டார நிலத்தடி நீர் பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த குளத்தை, ஆறு ஆண்டுகளுக்கு முன், கரைகளை கட்டி சீரமைக்கப்பட்டது. மழை நீர் சேகரிக்கும் வகையில் வடிகால் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
சில ஆண்டுகளாக, இந்த குளம் பராமரிக்கப்படவில்லை. குளத்திற்கு வரும் மழை நீர் வடிகாலில், சுற்று வட்டார வர்த்தக நிறுவனங்கள் திருட்டுத் தனமாக கழிவு நீர் விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் பெய்த மழை நீருடன் கழிவு நீர் கலந்து, குளத்து நீர் மாசடைந்துள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
மேலும், குளத்தை சுற்றி நடைபாதையில், முதியவர்கள் ஓய்வு எடுப்பதற்காக அமைக்கப்பட்ட இருக்கைகளில், 'குடி' மகன்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
மது பாட்டில்கள், உணவுக் கழிவுகளை குளத்தில் வீசுகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர், குளத்தை துாய்மைபடுத்தி, குடி மகன்கள் வராமல் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.