'ஆஹா இன்ப நிலாவினிலே, உல்லாச உலகம் உனக்கே சொந்தம்...' போன்ற, காலத்தால் அழியாத பாடல்களை பாடிய, கண்டசாலாவின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பாடிய பாடல்களை, இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வரும், அவரின் மருமகள் பார்வதி ரவி கண்டசாலா: அப்பாவுக்கு கர்நாடக சங்கீதம் தான் பிடிக்கும்; பரதநாட்டியத்தில் ஈடுபாடு இல்லை. ஆனால், அம்மாவுக்கு அதில் ஈடுபாடு உண்டு.
எனக்கு எட்டு வயதிருக்கும் போது, அப்பாவுக்கு தெரியாமல், பரதநாட்டியம் கற்றுக் கொள்ள, அம்மா எதிர் வீட்டில் சேர்த்து விட்டார். அப்படித்தான், நாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.
சில ஆண்டுகளிலேயே அரங்கேற்றத்துக்கு தயாராகி விட்டேன். இருந்தாலும், அப்பாவுக்கு பிடிக்காது என்பதால், அம்மா அதைப்பற்றி அவரிடம் சொல்லவில்லை.
ஒரு முறை என் பள்ளியில், நான் பரதநாட்டியம் ஆடியதை பார்த்த, என் தாய்மாமா, 'உங்க பொண்ணு ரொம்ப நல்லா நாட்டியம் ஆடுறாளே'ன்னு, அப்பாவிடம் சொல்லி விட்டார்.
அதன் பிறகு தான், என் நாட்டிய அரங்கேற்றமே நடந்தது.
என் மாமியாருக்கு பரதநாட்டியம் ரொம்பவும் பிடிக்கும். அதனால், புகுந்த வீட்டில் எல்லாருமே, நான் தொடர்ந்து ஆடும்படி ஊக்கப்படுத்தினர்.
வயிற்றில் ஆறு மாத குழந்தையை சுமந்தபடியே, 'இன்டர்நேஷனல் புரோகிராமில்' ஆடியிருக்கேன். குழந்தை பிறந்த மூன்று மாதத்தில், நிறைய சபாக்களில் ஆடியிருக்கேன்.
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன்; இரண்டு முறை, 'கலைமாமணி' விருது கொடுத்து கவுரவித்தனர்.
நாற்பது ஆண்டுகளாக, என் மாமனார் பாடிய பகவத் கீதாவுக்கு, நடன ரூபத்தில் வடிவம் கொடுத்தேன். அரசு பள்ளிகளுக்கு போய், அங்குள்ள குழந்தைகளுக்கு நாட்டியம் கற்றுத் தருகிறேன்.
என்னிடம் பரதம் கற்றுக் கொள்ளும் குழந்தைகளில் சிலர், நாட்டிய உடைகள் கூட வாங்க முடியாதஅளவுக்கு ஏழ்மையில் இருப்பர்; அதை, நானே வாங்கித் தருகிறேன்.
'திருமணம், குழந்தை, குடும்பம், வேலை என எது வந்தாலும் சரி... கலையை தொடர்ந்து செய்யுங்கள்' என்று, என்னிடம்பரதம் கற்றுக் கொள்பவர்களை அறிவுறுத்துவேன்.
ஒரு பெண் எப்படி புதுசா வந்த குடும்பத்தை, தன்னோட குடும்பமாக ஏற்று கவனித்துக் கொள்கிறாளோ, அது போல கணவர், மாமனார், மாமியாரும், அவளை தங்களின் வீட்டுப் பெண்ணாக நினைத்து, அவள் ஆசைப்படுவதை செய்ய ஒத்துழைக்க வேண்டும்.