புதுடில்லி, :'மத பயங்கரவாதம் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதத்தில் ஈடுபட வைக்கும் மூளைச்சலவைதான், நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கிய பிரச்னையாகும். இதை நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும்' என, போலீஸ் தலைவர்கள் மாநாட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்கள், ஐ.ஜி.,க்களின் மூன்று நாள் மாநாடு, சமீபத்தில் புதுடில்லியில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வன்முறையை துாண்டுதல்
நேற்று முன்தினம் முடிவடைந்த இந்த மாநாட்டில், பாதுகாப்பு பிரச்னைகள் தொடர்பான ஆய்வறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
உயர் போலீஸ் அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் மத அடிப்படைவாதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தப் பிரச்னை முஸ்லிம்களிடையே மிகத் தீவிரமாக உள்ளது.
அதிக அளவில் போதனை செய்யப்படுவது, இது தொடர்பான தகவல்கள், நவீன தகவல் பரிமாற்ற சாதனங்களில் சுலபமாக கிடைப்பது, எல்லை கடந்த பயங்கரவாதம், அண்டை நாடுகளின் துாண்டுதல் போன்றவை காரணமாக இது மிகப் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.
முஸ்லிம் இளைஞர்கள், மத ரீதியில் பயங்கரவாதத்தில் ஈடுபடும்படி மூளைச்சலவை செய்யப்படுகின்றனர்.
இது, நம் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் பல முஸ்லிம் அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த இளைஞர்களிடம் மதப் பெருமையை ஊட்டுவதாக சொல்லி, அவர்களை பயங்கரவாத செயல்களிலும் வன்முறையிலும் ஈடுபட துாண்டி விடுகின்றனர். இது, நம் நாட்டின் கலாசாரம், ஒருமைப்பாடு, ஒற்றுமை, மத நல்லிணக்கம், உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிராக உள்ளது. இது போக, இந்த இளைஞர்கள் ஜனநாயகம், அரசியல் சாசனம், அரசுக்கு எதிராகவும் துாண்டப்படுகின்றனர்.
இஸ்லாமிய கொள்கைகள், நுால்கள், எழுத்துகளை தங்களுக்கு ஏற்ப திரித்து, இந்த இளைஞர்கள் தவறான வழியில் வழிநடத்தப்படுகின்றனர்.தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பச்சாதாபத்தை ஏற்படுத்தி, இவர்கள் துாண்டிவிடப்படுகின்றனர்.
பிரச்னைகளுக்கு தீர்வு
இந்த மத பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில், சமீபத்தில் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா, தடை செய்யப்பட்ட அமைப்புகளான, சிமி, வஹாத் - இ - இஸ்லாமி, இஸ்லாமிக் இளைஞர் கூட்டமைப்பு, ஹிஸ்பத் தஹ்ரீர், அல் உம்மா போன்றவை ஈடுபட்டுள்ளன.
இதற்காக, இந்த அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன. இது தொடர்பான கருத்துகள்,மொபைல் போன் உள்ளிட்ட நவீன தகவல் பரிமாற்ற சாதனங்கள் வாயிலாக தொடர்ந்து பரிமாறப்படுகின்றன.
இந்த அமைப்புகளுக்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு தருகிறது. வளைகுடா நாடுகள் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு செல்லும் நம் முஸ்லிம் இளைஞர்கள், அங்கு மூளைச்சலவை செய்யப்படுகின்றனர்.
பயங்கரவாதம், வன்முறைதான் பிரச்னைகளுக்கு தீர்வு என்ற மனோபாவத்தை இந்த இளைஞர்களிடம் அவர்கள் விதைக்கின்றனர். இந்தப் பிரச்னையை பலமுனைகளில் இருந்து எதிர்கொள்ள வேண்டும். இதுபோன்ற அமைப்புகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை தொகுக்க வேண்டும்.
இதுபோன்ற அமைப்புகளால் நாட்டின் பாதுகாப்புக்கு உள்ள அபாயம் குறித்து மாநில போலீஸ் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். மதமாற்றம் செய்யப்படுவது குறித்தும் கண்காணிக்க வேண்டும்.மிதவாத முஸ்லிம் தலைவர்கள், மத குருக்கள், அமைப்புகளின் நம்பிக்கையை பெறுவதுடன், அவர்களின் உதவியையும் நாடலாம்.
மதமாற்றம், மத பயங்கரவாதம் எந்தப் பகுதிகளில் அதிகம் நடக்கிறது என்பதை கண்டறிந்து, அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, ௨௦ ஆண்டுகளில், நம் அண்டை நாடான சீனாவில் பெரும் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, உற்பத்தி வளர்ச்சி ஏற்பட்டது. தெற்காசியாவில், குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனக்கு போட்டியாக இருக்கும் இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பது சீனாவின் முக்கிய நோக்கமாக இருந்து வந்தது.இதற்காகவே, நம் நாட்டைச் சுற்றியுள்ள நாடுகளுடன் சீனா நெருக்கமாக பழகியது. அந்த நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகளில் பெரும் முதலீடுகளை செய்தது. அந்த நாடுகளுக்கு தேவையான கடன் வசதி அளிப்பது என, அவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.