கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பள்ளியறை எனும் கண்ணாடி அறை உற்சவம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் பெருமாள் தாயார், உபய நாச்சியார், ஆண்டாள் உற்சவர்களுக்கு பட்டாடைகள் உடுத்தி, நகைகள் அணிவித்து சிறப்பு மலர் அலங்காரம் செய்து, கண்ணாடி அறைக்குள் எழுந்தருளச் செய்தனர்.
பழ வகைகள், இனிப்பு, பலகாரங்கள் பள்ளி அறைக்குள் வைக்கப்பட்டு பூஜை செய்த பின் அறை கதவுகள் சாத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று, சுப்ரபாத சேவை, பசு பூஜை, விஸ்வரூப தரிசனம் நடத்தி பள்ளி அறை திறக்கப்பட்டது. விஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து பூஜைகளை செய்து, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.