லக்னோ, உத்தர பிரதேசத்தில், 10 ரூபாய் நோட்டைக் கூட எண்ணத் தெரியாமல் திணறியவரை மணம் முடிக்க மறுத்து, மணமகள் திருமணத்தை நிறுத்திய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள முகமதாபாத் பகுதியைச் சேர்ந்த பெண், ரீடா சிங், 21. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த, 23 வயதான நபருடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.
சமீபத்தில் இவர்கள் திருமண நாளன்று ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்தன. அப்போது, 'மணமகன் இயற்கைக்கு மாறுபட்ட வித்தியாசமான குணம் உடையவர். போதிய படிப்பறிவு இல்லாதவர்' என, மணமகள் வீட்டாரிடம், சிலர் புகார் தெரிவித்தனர்.
திருமணத்துக்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், இந்த விவகாரம் மணமகள் கவனத்துக்குச் சென்றது. இதையறிந்த மணமகன் வீட்டார், திருமணத்தை முடிக்கும்படி அவசரப்படுத்தினர்.
இதையடுத்து, 'மணமகனுக்கு ஒரு பரீட்சை வைக்கிறேன். அதில் தேர்வாகி விட்டால், அவரையே திருமணம் செய்து கொள்கிறேன்' என கூறிய ரீட்டா சிங், மணமகனிடம், 10 ரூபாய் நோட்டுகள் சிலவற்றை கொடுத்து, அதை எண்ணி, மொத்த தொகை எவ்வளவு என தெரிவிக்கும்படி கூறினார்.
ஆனால், அந்த ரூபாய் நோட்டுகளை எண்ண முடியாமல் மணமகன் திணறினார். இதையடுத்து, 'இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்' என கூறி, திருமணத்தை நிறுத்தி விட்டு, மணமகள் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.
இதனால், மணமகன் - மணமகள் வீட்டார் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், போலீசார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்த முயன்றனர்.
ஆனால், திருமணத்தை நிறுத்துவதில் மணமகள் உறுதியாக இருந்தார். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.