லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில், சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, துப்பாக்கிச் சூடு நடத்தி 10 பேரைக் கொன்ற நபர், போலீசார் சுற்றி வளைத்ததை அடுத்து தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 16 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள மான் டெரே பார்க் என்ற பகுதியில், 21ம் தேதி இரவு, ஆயிரக்கணக்கானோர் சீன புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர், திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர். விசாரணையில் தாக்குதல் நடத்தியது, கேன் ட்ரான் என்ற 70 வயது முதியவர் என தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் நகர் முழுதும் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், கொலையாளி பயன்படுத்திய வேனை, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 30 கி.மீ., தொலைவில், போலீசார் நேற்று சுற்றி வளைத்தனர்.
அதை சோதனை செய்ததில், இறந்த நிலையில் ட்ரானின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர ஷெரீப், ராபர்ட் லுானா கூறியதாவது:
ட்ரான் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பில்லை. தாக்குதலுக்கான பின்னணி தெரியாததால், அது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.