மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தியது, இங்கு வசிக்கும் ஹிந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் சமீபத்தில் சீக்கிய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அவர்கள் எழுதி வைத்திருந்தனர்.
கடந்த வாரம் விக்டோரியா மாகாணத்தில் உள்ள காரம் டாவ்ன்ஸ் நகரில், பிரசித்தி பெற்ற சிவா விஷ்ணு கோவிலிலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதுடன், இந்தியா மற்றும் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களை எழுதி வைத்திருந்தனர்.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, ஆஸ்திரேலியாவில் உள்ள ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தின. இந்நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்களின் அட்டூழியம் நேற்றும் தொடர்ந்தது.
மெல்போர்ன் நகரில் ஆல்பர்ட் பார்க் என்ற இடத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், சுவற்றில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி வைத்திருந்தனர்.
இது குறித்து, ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த பக்த தாஸ் கூறுகையில், ''கிருஷ்ணர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது. வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குவதை ஏற்க முடியாது,'' என்றார்.