கராச்சி, பாகிஸ்தானில், நீதிமன்றத்திலேயே புது மணப்பெண்ணான மகளை சுட்டுக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள மலைவாழ் பகுதியான வஜிரிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண், சமீபத்தில் டாக்டர் ஒருவரை காதல் திருமணம் செய்தார்.
இதை பெற்றோர் ஏற்காத நிலையில், வீட்டில் இருந்து வெளியேறிய இவர், கராச்சியில் கணவருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், தான் விருப்பப்பட்டு திருமணம் செய்தது குறித்து கூறுவதற்காக, இவர் நேற்று கராச்சியில் உள்ள நீதிமன்றத்துக்குச் சென்றார்.
அப்போது, அங்கிருந்த இவரது தந்தை, மகளை நீதிமன்றத்திலேயே துப்பாக்கியால் சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்தார்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்த போலீசார், கவுரவக் கொலை செய்த தந்தையை கைது செய்தனர்.