வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
எஸ்.மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல் வா(வியா)திகள் அனைவரும், 'பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த, புலவர் பெருமான்கள்' என்பதை, நாம் அனைவரும் அறிவோம். ஆனால், ஜம்மு - -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, நாட்டில் உள்ள எல்லா அரசியல்வாதிகளையும் விழுங்கி ஏப்பம் விடும் அளவுக்கான, ஒரு பொய்யை அரங்கேற்றி உள்ளார்...
அதாவது, காங்கிரஸ் - எம்.பி., ராகுலின் ஒற்றுமை யாத்திரை, தற்போது, ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. லகான்பூர் என்ற இடத்தில் நடைபெற்ற யாத்திரையில், ராகுலுடன் பங்கேற்ற பரூக் அப்துல்லா, 'ஆதிசங்கரருக்கு பின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, பாதயாத்திரை மேற்கொண்டவர் ராகுல் தான்' என பாராட்டியுள்ளார்.
![]()
|
அத்துடன், 'ராகுல் நடத்தும் யாத்திரையின் நோக்கம், இந்தியாவை ஒன்றுபடுத்துவதே. இந்த யாத்திரையின் எதிரிகள், நம் நாட்டின் எதிரிகள், மனிதநேயத்தின் எதிரிகள் மற்றும் மக்களின் எதிரிகள்' என்றும் பேசியுள்ளார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, ஆதிசங்கரர் பாதயாத்திரையாக காடுகளின் வழியாக நடந்து வந்தபோது, கூடவே, பாதுகாப்புக்காக, பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய, 'கேரவன்' வாகனம் வந்ததா அல்லது கால்களில் கேன்வாஸ் ஷூ அணிந்தபடி அவர் நடந்து வந்தாரா அல்லது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ பவனி வந்தாரா... புருடா விடுவதற்கும், புளுகுவதற்கும் ஒரு அளவு இல்லையா... என்ன கொடுமை இது?
ஹிந்து மத தத்துவத்தை, பாரதம் முழுக்க பரப்பவே, பாதயாத்திரை மேற்கொண்டார் ஆதிசங்கரர்; ராகுல் என்ன தத்துவத்தை பரப்ப பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்... இழந்த மகுடத்தை மீண்டும் அடைந்திடத்தானே? ஆதிசங்கரரும், ராகுலும் ஒன்றா... என்ன அக்கிரமம் இது? இதற்கு மேலாக, முத்தாய்ப்பாக மற்றொரு புருடாவும் விட்டிருக்கிறார், பரூக் அப்துல்லா...
அதாவது, 'மஹாத்மா காந்தி மற்றும் ராமபிரானின் இந்தியாவில், நாம் அனைவரும் ஒன்றாகவே இருந்தோம்' என்று கலாய்த்து இருக்கிறார். ஒன்றாக இருந்த இந்தியாவை பிரித்து, பாகிஸ்தான் (கிழக்கு), பாகிஸ்தான் (மேற்கு) என்று பங்கு போட்டு கொடுத்தது யார்... கே.பி.ஹெட்கேவரா, பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சேவா, கணேஷ் தாமோதர் சாவர்க்கரா... இல்லை விநாயக் தாமோதர் சாவர்க்கரா அல்லது தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ., கட்சியா? நாட்டின் பிரிவினைக்கு காரணமாக இருந்தது, காங்கிரஸ் கட்சி தானே.
ஜம்மு - -காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லாவின் பேச்சு எப்படி இருக்கிறது என்றால், ஆடு, மாடுகளை வெட்டி கறி வியாபாரம் செய்யும் கசாப்புக் கடைக்காரன் அஹிம்சையை பற்றி, 'லெக்சர்' எடுப்பது போலுள்ளது. ஒற்றுமையாம்... தேசப் பாதுகாப்பாம்...!