வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பல ஆண்டுகளாக குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணம் செலுத்தாத தனியார் நிறுவனங்கள் மீது 'சீல்' வைப்பு, 'ஜப்தி' நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் இரண்டாம் கட்டமாக, அரசு துறைகள் நிலுவை வைத்துள்ள 52 கோடி ரூபாயை வசூலிக்க, ஒவ்வொரு துறை செயலர்களுக்கும் 'டெமி அபீஷியல் லெட்டர்' எனப்படும், நேர்முக வேண்டுகோள் கடிதம் அனுப்ப, வாரியம் முடிவு செய்துள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வழியாக, தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
சென்னையில், 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் உள்ளன. இதன் வாயிலாக, ஆண்டுக்கு 885 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதில் குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணம் 505 கோடி ரூபாயும், இதர உள்ளாட்சிகள், தொழிற்சாலைகள் மற்றும் லாரி குடிநீர் வழியாக, 380 கோடி ரூபாயும் கிடைக்கிறது.
இந்த வகையில், ஏப்., முதல் செப்., வரை முதல் அரையாண்டு மற்றும் அக்., முதல் மார்ச் வரை இரண்டாம் அரையாண்டு என, நுகர்வோரிடம் இருந்து வரி மற்றும் கட்டணம் வசூலிக்கப்படும்.
வீடுகளுக்கு குடிநீர், கழிவு நீர் வரியாக, ஆண்டு சொத்து மதிப்பில் 7 சதவீதமும், கட்டணமாக மாதம் 80 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வணிகம் சார்ந்த கட்டடங்களுக்கு கட்டணம் மாறுபடும்.
மொத்தம் 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர். குடிநீர் இணைப்பு வழங்காத விரிவாக்க பகுதிகளில், வரி மட்டும் செலுத்த வேண்டும்.
இதன்படி, 2022 - 23ம் நிதியாண்டில் 885 கோடி ரூபாயும், முந்தைய ஆண்டுகளில் பாக்கி, 560 கோடி ரூபாயும் சேர்த்து, 1,445 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். இதில், 2022 ஏப்., முதல் 2023 ஜன., 20ம் தேதி வரை, 810.31 கோடி ரூபாய் வசூலானது.
இது, முந்தைய ஆண்டுகளை விட, 110 கோடி ரூபாய் அதிகமாக வசூலாகி உள்ளது. அதேவேளையில் வழக்கு, இதர காரணங்களுக்காக, 240 கோடி ரூபாய் வசூலிக்க முடியாமல் உள்ளது. மீதம் 394.69 கோடி ரூபாய் வசூலாக வேண்டும்.

இதில், அரசு துறைகள் 52 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. வீடுகள் வழியாக, 224.69 கோடி ரூபாயும், வணிகம் சார்ந்து 118 கோடி ரூபாயும் வசூலாக வேண்டும்.
முதற்கட்டமாக, வணிகம் சார்ந்த 118 கோடி ரூபாயை வசூலிக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், அதிக ஆண்டுகள் நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள் பெயர், குடிநீர் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
இரண்டாம் கட்டமாக, அரசு துறைகள் சார்ந்த 52 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, குடிநீர் வாரியம் சார்பில், நிலுவை வைத்துள்ள ஒவ்வொரு அரசு துறை செயலர்களுக்கும், 'டெமி அபீஷியல் லெட்டர்' எனப்படும் நேர்முக வேண்டுகோள் கடிதம் அனுப்பி, நிலுவைத் தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வரியில் தான் குடிநீர், கழிவு நீர் சேவை, ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிலுவைத் தொகையை வசூலிக்க, வருவாய்த் துறை வழியாக 'ஜப்தி, சீல்' வைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கிறோம். பல ஆண்டுகள் வரி செலுத்தாமல் ஏமாற்றி வரும் நிறுவனங்கள் பெயரை வெளியிட உள்ளோம். சில அரசு துறைகளும் வரியை முறையாக செலுத்துவதில்லை. இதனால், மின் வாரியம் எடுத்த நடவடிக்கை போல, துறை செயலர்களுக்கு நேர்முக வேண்டுகோள் கடிதம் எழுத உள்ளோம். இதன் வழியாக, நிலுவைத் தொகையை வசூலிக்க முடியும்.
- குடிநீர் வாரிய அதிகாரிகள்
நிலுவை வைத்துள்ள அரசு துறைகள்
மாநில அரசின் கீழ் இயங்கும் பொதுப்பணித்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டுவசதி வாரியம், கல்லுாரி கல்வி இயக்குனரகம், ஆவின், காவல்துறை, தீயணைப்பு துறை, மின் வாரியம், வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர அரசு துறைகள்.
மத்திய அரசின் கீழ் இயங்கும், வருமான வரித்துறை, ரயில்வே, தொலை தொடர்பு, தபால்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் நிலுவை வைத்துள்ளன.
'டெமி அபீஷியல் லெட்டர்'
துறைகள் சார்ந்த கோரிக்கைகளுக்கு, முதலில் ஒவ்வொரு துறை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடையே, 'டி.ஓ.எல்.,' என்ற டெமி அபீஷியல் லெட்டர் நேர்முக வேண்டுகோள் கடிதம் அனுப்பப்படும். இந்த கடிதம், துறைக்கு இக்கட்டான நிலை ஏற்படும்போது தான் பயன்படுத்தப்படும்.
இதேபோல, மின் வாரிய செயலர், பல ஆண்டுகள் நிலுவை வைத்துள்ள அரசு துறைகளுக்கு, டி.ஓ.எல்., கடிதம் எழுதி உள்ளார்.
இதனால், நிலுவைத் தொகை அதிகமாக வசூலாகி உள்ளது. குடிநீர் வாரியத்தில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், டி.ஓ.எல்., எனப்படும் 'டெமி அபீஷியல் லெட்டர்' நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.