வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழகம் முழுதும் மின் நுகர்வோரின் இணைப்பு எண்ணுடன், 'ஆதார்' எண் இணைக்கும் பணியை, 100 சதவீத முடித்ததில், தேனி மின் பகிர்மான வட்டம் முதலிடத்தை பிடித்து உள்ளது.
தமிழக மின் வாரியம், 44 மின் பகிர்மான வட்டங்களாக செயல்படுகிறது. இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் வீடுகள், குடிசை வீடுகள், விவசாயம், விசைத்தறி பிரிவுகளை சேர்ந்த, 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி, நவ., 15ம் தேதி துவக்கப்பட்டது.
ஆதார் இணைக்க, இம்மாதம் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. நேற்று வரை, 2.10 கோடி நுகர்வோர்கள் இணைத்துள்ளனர். அதில், தேனி பகிர்மான வட்டத்தில், 48 லட்சம் நுகர்வோரும் 100 சதவீதம் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இதையடுத்து, 100 சதவீதம் ஆதார் எண் இணைத்ததில், தேனி பகிர்மான வட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்காக, அதன் மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர் மற்றும் ஊழியர்களை, மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி பாராட்டியுள்ளார்.
சில வீட்டு உரிமையாளர்கள், மின் இணைப்பில் உள்ள நபரின் ஆதார் எண்ணை இணைக்காமல், வேறு நபர்களின் ஆதாரை இணைத்துஉள்ளனர்.
அதை மின் வாரியம் சரிபார்த்ததில், 4.85 லட்சம் பேர் போலியாக ஆதார் பதிவு செய்திருப்பதை கண்டறிந்து, அந்த பதிவுகளை நீக்கியுள்ளது. அவர்களின் பதிவு செய்த மொபைல் போன் எண்களுக்கு சரியான ஆதாரை இணைக்குமாறு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டு உள்ளது.