மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியர், தங்களின் 20 மாத பெண் குழந்தையை, பக்கத்து வீட்டில் வசிக்கும் 35 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தனர். இதில், தங்கள் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாகவும், டாக்டரிடம் காட்டியதில், குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் கூறியதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அதை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போக்சோ உள்ளிட்ட பல சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
12 வயது மகளிடம் சில்மிஷம்; தந்தைக்கு 'ஆயுள்'
விருதுநகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த கொத்தனாராக வேலை செய்யும் 37 வயது நபர் 2021ல் வீட்டிலிருந்த தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். விருதுநகர் மகளிர் போலீசார் தந்தையை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு, ஆயுட்காலம் வரை சிறை தண்டனை விதித்தும், சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தும், நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா ஆஜரானார்.
சிறுமிக்கு தொல்லை; மூவர் மீது போக்சோ
விருதுநகரில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த செல்வி, கூடலிங்கம், முத்துப்பாண்டி ஆகியோர் மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பி.குமாரலிங்கபுரம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தைத் திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலியல் தொழில் செய்த செல்வியுடன் முத்துப்பாண்டி என்பவர் இணைந்து அச்சிறுமியை அதிக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். அப்பகுதியை சேர்ந்த கூடலிங்கம் சிறுமியிடம் பலமுறை உறவில் ஈடுபட்டதுடன் தாக்கியும் உள்ளார். விருதுநகர் மகளிர் போலீசார் விசாரித்து செல்வி உள்ளிட்ட மூவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
திருச்சி தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ்., நகரில் வசிப்பவர் நேதாஜி, 60; 'பெல்' நிறுவனத்தில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற அவர், மூன்று சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசிக்கிறார். சகோதரர்களுடன் சேர்ந்து பல்வேறு தொழில்கள் செய்து வரும் அவர்களுக்கு சொந்தமாக, 'கிரஷ'ர்கள், கட்டுமான தொழிலுக்கான 'ரெடிமிக்ஸ்' நிறுவனம், பஸ்கள் உள்ளன. தவிர, நெடுஞ்சாலைத் துறையில் கான்ட்ராக்ட் பணிகளையும் செய்கின்றனர்.

நேற்று காலை, நேதாஜி சகோதரர்களில் ஒருவரான தேவேந்திரன் மகன் பாலாஜிக்கு திருமண நிச்சயதார்த்தம், திருச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்தது. வீட்டை பூட்டி, அனைவரும் அங்கு சென்று விட்டனர். ஏதேனும் பிரச்னை என்றால், எச்சரிக்கை ஒலி எழுப்பும், 'சென்சார்' கருவி வீட்டில் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. நிச்சயதார்த்த நிகழ்வில் இருந்த நேதாஜியின் மகள் மொபைல் போனுக்கு, 'வீட்டுக்கதவு திறக்கப்படுகிறது' என, சென்சார் மூலம் எச்சரிக்கை செய்தி வந்தது.
வீட்டிற்கு ஆட்களை அனுப்பி பார்ப்பதற்கு முன், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், 300 சவரன் நகைகளை திருடி தப்பினர். திருவெறும்பூர் டி.எஸ்.பி., அறிவழகன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடம் வந்து, வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் லிலி அழைத்து வரப்பட்டு, திருவெறும்பூர் கல்லணை சாலை வரை ஓடியது; யாரையும் பிடிக்கவில்லை. திருவெறும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராணுவ வீரர் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிய கொடூரம்
நாட்டை காக்கும் ராணுவ வீரரின் குடும்பத்தையே, ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள கொடூரம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது. இம்மாவட்டத்தில் அதிகரிக்கும், கட்டப்பஞ்சாயத்து புகார்கள் குறித்து, நடவடிக்கை எடுப்பதில் போலீசார் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த சின்ன அக்ரஹாரத்தை சேர்ந்தவர் பிரியங்கா, 30. இவரது கணவர், ராணுவ வீரர் செந்தில்குமார், 41. இவர்களின் உறவினர்கள் உட்பட, 15க்கும் மேற்பட்டோர் தங்களை, ஊர் பிரமுகர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து, ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாக, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.
அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி அடுத்த சின்ன அக்ரஹாரத்தை சேர்ந்த மணியக்காரர் ரமேஷ் மற்றும் சிலர், எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைப்பதாக கட்டப்பஞ்சாயத்து செய்தனர். ஊர் பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்திற்கு தலா, 500 ரூபாய் வசூலித்தனர். இதில், எங்கள் குடும்பத்தார் மற்றும் உறவினர்களை தவிர்த்து விட்டனர்.
எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், மற்றவர்கள் எழுந்து சென்று விடுகின்றனர். பள்ளியில் எங்கள் குழந்தைகளுடன், மற்ற குழந்தைகள் பேசுவதில்லை. பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க விடுவதில்லை. எங்கள் குடும்பத்தினர், நாட்டை காப்பாற்ற ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், எங்கள் குடும்பங்களை, ஊரை விட்டு தள்ளி வைத்து உள்ளனர். சமூக விரோத காரியத்தில் ஈடுபடும் கட்டப்பஞ்சாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
2வது மனைவி வெட்டி கொலை; கணவனுக்கு வாழ் நாள் சிறை
திருச்சி மாவட்டம், ஜெம்புநாதபுரம் அருகே உள்ள துலையாநத்தத்தைச் சேர்ந்த, 'போர்வெல்' லாரி டிரைவர் ரமேஷ், 39. முதல் மனைவி இறந்ததால், கோமதி, 34, என்பவரை, இரண்டாவது திருமணம் செய்த அவருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெளி மாநிலங்களுக்கு போர்வெல் தொழிலுக்கு செல்லும் அவர், ஆறு மாதத்துக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வருவார். அப்போதும் குடும்ப செலவுக்கு பணம் தராமல், எப்போதும் போதையில் இருந்தார்.
கடந்த ஆண்டு, செப்., 9ம் தேதி, ரமேஷிடம் குடும்ப செலவுக்கு, கோமதி பணம் கேட்டார். ரமேஷ் ஆத்திரமடைந்து, அரிவாளால் மனைவியை வெட்டினார். அவரிடம் இருந்து தப்பித்து, தெருவில் ஓடிய அந்த பெண்ணை துரத்திச் சென்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். ஜெம்புநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த ரமேஷை, போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி ஸ்ரீவத்சன், மனைவியை கொலை செய்த ரமேஷுக்கு, வாழ்நாள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த கொலை சம்பவம் நடந்த, 136 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுஉள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அமெரிக்காவில் தற்கொலை
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 16 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள மான் டெரே பார்க் என்ற பகுதியில், 21ம் தேதி இரவு, ஆயிரக்கணக்கானோர் சீன புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர். விசாரணையில் தாக்குதல் நடத்தியது, கேன் ட்ரான் என்ற 70 வயது முதியவர் என தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் நகர் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், கொலையாளி பயன்படுத்திய வேனை, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 30 கி.மீ., தொலைவில், போலீசார் நேற்று சுற்றி வளைத்தனர். அதை சோதனை செய்ததில், இறந்த நிலையில் ட்ரானின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர ஷெரீப், ராபர்ட் லுானா கூறியதாவது: ட்ரான் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பில்லை. தாக்குதலுக்கான பின்னணி தெரியாததால், அது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தானில் மகளை சுட்ட தந்தை கைது
பாகிஸ்தானில் உள்ள மலைவாழ் பகுதியான வஜிரிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண், சமீபத்தில் டாக்டர் ஒருவரை காதல் திருமணம் செய்தார். இதை பெற்றோர் ஏற்காத நிலையில், வீட்டில் இருந்து வெளியேறிய இவர், கராச்சியில் கணவருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், தான் விருப்பப்பட்டு திருமணம் செய்தது குறித்து கூறுவதற்காக, இவர் நேற்று கராச்சியில் உள்ள நீதிமன்றத்துக்குச் சென்றார். அப்போது, அங்கிருந்த இவரது தந்தை, மகளை நீதிமன்றத்திலேயே துப்பாக்கியால் சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்தார். இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்த போலீசார், கவுரவக் கொலை செய்த தந்தையை கைது செய்தனர்.