வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: திருப்பூரில் நடக்கும் புத்தக கண்காட்சி பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தும் கல்வித் துறைக்கு பா.ஜ., மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவரின் அறிக்கை:
திருப்பூரில் வரும், 27ம் தேதி முதல் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் 'பின்னல் புக் டிரஸ்ட்' உடன் இணைந்து புத்தக திருவிழா நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நஞ்சப்பா அரசுப் பள்ளி திடலில் நடத்தப்படுவதாக இருந்த கண்காட்சி, பல்வேறு எதிர்ப்பால், தற்போது வேலன் ஓட்டல் வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட்', பாரதி புத்தகாலயம் ஆகியவை, மா.கம்யூ., கட்சியின் வர்த்தக நிறுவனத்தின் கிளையாக செயல்பட்டு வருவது கண்கூடு. முழுக்க, முழுக்க ஹிந்து விரோத கருத்துக்களையும், கம்யூனிச சித்தாந்தங்களையும், தேச விரோத நச்சு சிந்தனைகளை விதைக்கும் வர்த்தக நோக்கோடு செயல்படும் இந்த அமைப்போடு, மாவட்ட நிர்வாகம் இணைந்து ஒரு விழாவை நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தவிர, கண்காட்சியின் பணிகளை மேற்கொள்ள, 94 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கட்டாயமாக ஈடுபடுத்துவது, சட்ட விரோதமானது. கற்றலில் தமிழக மாணவர்கள் பின்தங்கி இருப்பதாக சொல்லப்படும் இந்நேரத்தில், பொது தேர்வுக்கு மாணவர்களை தீவிரமாக தயார் செய்து வரும் வேளையில், ஆசிரியர்கள் பிற பணிகளுக்கு, குறிப்பாக, அரசியல் கட்சி சார்ந்த சமூக விரோத கொள்கைகளை பரப்பும் நிகழ்வுகளில் ஈடுபடுத்துவது, கடும் கண்டனத்துக்குரியது.

இடதுசாரி, மார்க்சிய மற்றும் நக்சல் சித்தாந்தங்களை மாணவ, மாணவியரிடையே புகுத்த செய்யும் சதியே இந்த புத்தக கண்காட்சி என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கண்காட்சியை, மாவட்ட நிர்வாகமே இணைந்து நடத்துவது முறையற்றது. சட்டவிரோதமானதும் கூட.
எனவே, முதல்வர் ஸ்டாலின், நிலைமையை உணர்ந்து, இந்த புத்தக திருவிழாவிலிருந்து மாவட்ட நிர்வாகத்தை விடுவித்து கொள்ள, கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.
சக்திவேல் ராஜூ, பனியன் நிறுவன உரிமையாளர்: புத்தகம் திருவிழா அறிவை வளர்க்க கூடியமான விஷயமாக இருந்தாலும், ஒரு சித்தாந்தம் ரீதியிலான அமைப்பு உடையவர்களுடன், மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்துவது நல்லது கிடையாது. திருப்பூரில், இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகின்றனர். அதில், பேச்சாளர்கள், பொதுவாக ஹிந்து விரோத கொள்கைகளை உடையவர்கள் தான் பேசியும் உள்ளனர். ஒரு அமைப்பு சார்ந்து இருப்பதால், மற்றவர்களும் இதுபோன்று நடத்த மாவட்ட நிர்வாகத்தை அணுக வாய்ப்புள்ளது.
கே.பி. கோபால்சாமி, பனியன் நிறுவன அலுவலர், கணபதிபாளையம்: ஒரு குறிப்பிட்ட கட்சியின் அமைப்பை சேர்ந்தவர்கள் இணைந்து, அரசும் கைகோர்த்து புத்தக திருவிழாவை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு, அவர்களை ஆதரிக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது. இதை விடுத்து, அரசே தனியாக நடத்தி இருக்கலாம். ஏராளமான கட்சி, அமைப்பு என, பலரும் எங்களுக்கு ஆதரவு கொடுத்து நடத்துங்க என்று மாவட்ட நிர்வாகத்தை அணுகுவார்கள். இது ஒரு தவறான முன் உதாரணமாக உள்ளது.
எஸ்.பார்த்தசாரதி, தேசிய சிந்தனை கழகம்: புத்தக திருவிழா என்பது சமுதாயத்துக்கு அவசியமான ஒன்று தான். அரசு இதை ஏற்று தனியாக நடத்தினால் நன்றாக இருந்திருக்கும். அவர்களின் கொள்கை, கருத்துக்களை மக்களிடம் விளம்பரப்படுத்த வாய்ப்புள்ளது. மக்களுக்கு தேவையான இலக்கியம், கலாச்சாரம், பண்டைய வரலாறு போன்றவற்றை சொல்வார்களா என்பது கேள்விக்குறி தான். இதில், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஜி.கோபால், கல்வியாளர்: தேர்வு நெருங்கும் நேரத்தில், அரசு ஆசிரியர்களை புத்தக திருவிழாவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒரு அரசியல் கட்சி பின்புலத்தில் உள்ள அமைப்புடன் சேர்ந்து, மாவட்ட நிர்வாகம் நடத்தும் போது சரியாக இருக்காது. ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் நேரத்தில் இதுபோன்று நடத்த கூடாது. கோடை விடுமுறை போன்ற நேரத்தில், அரசே தனியாக நடத்தியிருக்கலாம்.