ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி:
கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டியது. காங்., தலைவராக இருந்த ஆச்சார்யா, 'அரசியலில் ஓய்ந்து, தோற்று போனவர்களுக்கு பதவி கொடுக்க கவர்னர் மாளிகைகள் உருவாக்கப்பட்டன' என்றார். 'அந்த மாளிகைகளை, ஏழைகளுக்கான மருத்துவ மனைகளாக பயன்படுத்தலாம்' என, மஹாத்மா காந்தி கூறியுள்ளார்.

'கவர்னர் பதவிகளை கலைப்பதாக வாக்குறுதி தந்தால் தான், காங்., உடன் கூட்டணி வைப்பேன்' என நிபந்தனை விதித்தால் என்ன?
இந்திய கட்டுனர் சங்க முன்னாள் தேசிய தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி:
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கட்டுமானத் துறையின் பங்களிப்பு, 70 சதவீதமாக உள்ளது. 2022ல், கட்டுமான பொருட்களின் விலையில் பெரும் ஏற்றத்தாழ்வு இல்லாததால், துறையின் வளர்ச்சி ஓரளவு நன்றாகவே இருந்தது. ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது தான், கட்டுமான துறையை பாதிக்கிறது.
எத்தனை சதவீதம் வரி போட்டாலும், நீங்களா அதை கட்டப் போறீங்க... எல்லாத்தையும், வீடு வாங்குறவங்க தலையில தானே கட்டுறீங்க!
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பஷீர் அகமது பேட்டி:
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, முந்தைய ஆட்சியில் நபார்டு வங்கி நிதி ஒதுக்கீடு செய்தது; இந்த திட்டத்தை கிடப்பில் போடாமல் நிறைவேற்ற வேண்டும். தேசிய நதி நீர் இணைப்பு திட்டத்தில், கோதாவரியில் இருந்து தண்ணீர் பெற நிதி ஒதுக்கீடு செய்து, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், 200 டி.எம்.சி., தண்ணீரை பெற்றுள்ளார். கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி, தமிழக அரசின் பங்கீட்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நதி நீர் இணைப்பு திட்டங்களில், எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், தி.மு.க., அரசு செயல்பட வேண்டும்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிராக, தமிழகத்தில் நடந்த போராட்டத்தின் போது, தாய்மொழியாம், நம் தமிழ் மொழி காக்கப்பட வேண்டும் என்பதற்காக, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாளை மொழிப் போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மாவட்ட வாரியாக, மொழிப் போர் தியாகி களின் உருவப்படங்களை வைத்து, மாலை அணிவித்து, அனைத்து நிர்வாகிகளும் வீரவணக்கம் செலுத்த வேண்டும்.

தி.மு.க.,வும், பழனிசாமி அணியும், நாளை தமிழகம் முழுக்க வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களை நடத்துறாங்க... இவரது அணியால, பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ண முடியலையோ?
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி:
தமிழக கவர்னர் ரவி, தற்போது தன் நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். குறிப்பாக, டில்லி சென்று வந்ததில் இருந்து, மாநில அரசுக்கு எதிரான போக்கை கடைப்பிடிக்காமல், அமைதியாக இருக்கிறார். தமிழகத்திற்கு வேறு பொறுப்பு கவர்னர், நியமிக்க இருப்பதாக தகவல் வருகிறது.

யாரை கவர்னராக நியமித்தாலும், 'அவர், பா.ஜ., தலைவர் போல செயல்படுறாரு'ன்னு இங்க எல்லாரும் கூவத் தானே போறாங்க!