
சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழா ஒத்திகை நன்றாக நடந்தது ஒரே குறை மக்கள் இல்லாததுதான்.வழக்கமாக நடக்கும் இடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால் கொஞ்சம் தள்ளி வேறு இடத்தில் நடத்தினர். அரசு எந்திரம் நினைத்தால் ஒரே இரவில் எந்தமாதிரியான இடத்தையும் மாற்றி அமைக்கும் என்பதற்கேற்ப இரண்டே நாளில் உழைப்பாளர் சிலையருகே புது இடத்தை குடியரசு தினவிழாவிற்காக நிர்மாணித்துள்ளனர்.

முப்படை வீரர்களின் அணிவகுப்பினை தொடர்ந்து மகராஷ்ட்ரா,அசாம் உள்ளீட்ட மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்சிகள் நடைபெற்றன.பாரதியின் பாடல்களுக்கு ஏற்ப கலைஞர்கள் நடனமாடினர் .கல்லுாரி பெண்கள் பானை மீதேறி ஆடியதும்,அசாம் மாநில பெண்களின் நடனமும் சிறப்பாக இருந்தது.

வீரர்கள் மிடுக்கான உடையுடன் காலை ஆறு மணிக்கே களத்திற்கு வந்து நடைபயிற்சி மேற்கொண்டு தங்களை சரிசெய்து கொண்டனர்.ராணுவ பிரிவில் முன் வரிசையில் நின்றவர்கள் ஒரே மாதிரி மீசை ட்ரிம் செய்திருந்தது பார்க்க வித்தியாசமாக இருந்தது.முதல் முறையாக ‛பேக்பைபர்' இசை வாசிக்கும் பெண்கள் குழுவினர் அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தனர் அவர்கள் அசைந்து அசைந்து ஆடியபடி அந்த இசையை வாசித்து வந்தது பார்க்க நன்றாக இருந்தது.

இரண்டு ஹெலிகாப்டர்கள் தேசியக்கொடிக்கு மலர்துாவி சென்றனஇது போன்ற நிகழ்வுகள் தேசப்பற்றை அதிகரிக்கும் ஆகவே பள்ளி கல்லுாரி மாணவ மாணவியர் இளைஞர்கள் உள்ளீட்ட பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி அனுமதிக்கப்பட வேண்டும்

ஆனால் நிஜத்தில் என்ன நடக்கிறது போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கும் என்ற காரணத்தைச் சொல்லி அந்தப்பக்கம் பொதுமக்கள் யாரும் எட்டிக்கூடப் பார்ப்பது இல்லை இன்றும் அதுதான் நடந்தது பொதுமக்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்கள் நிகழ்ச்சியை பார்க்க எப்போது வசதி செய்து தருகிறார்களோ அப்போதுதான் விழா களைகட்டும்.நாளை மறுதினம் நடைபெறும் குடியரசு தினவிழாவினை பொதுமக்களும் பார்வையிட ஏற்பாடு செய்யவேண்டும் அதற்கு அவர்களிடம் எவ்வித கெடுபிடியும் காட்டாதிருக்கவேண்டும்.

-எல்.முருகராஜ்