வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இந்தூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 385 ரன்கள் குவித்தது. துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் சதம் விளாசினர்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜன.,24) இந்தூரில் நடக்கிறது. இதில் 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லதாம் 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது ஷமி, சிராஜ்க்கு ஓய்வளிக்கப்பட்டு, உம்ரான் மாலிக், சகால் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் துவக்கம் தந்தனர். இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு 26 ஓவர்களில் 212 ரன்கள் சேர்த்தபோது இந்த ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 101 ரன்கள் (85 பந்தில் 9 பவுண்டரி, 6 சிக்சர்) சேர்த்து போல்டானார். அடுத்து சுப்மன் கில் 112 ரன்களில் (78 பந்தில் 13 பவுண்டரி, 5 சிக்சர்) வெளியேறினார்.

பின்னர் வந்த விராட் கோஹ்லி (36), இஷான் கிஷான் (17), சூர்யகுமார் யாதவ் (14), வாஷிங்டன் சுந்தர் (9), ஷர்துல் தாகூர் (25) ஓரளவு கைகொடுக்க, மறுமுனையில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடினார். 36 பந்தில் அரைசதம் கடந்த பாண்ட்யா 54 ரன்னில் அவுட்டானார்.
கடைசி பந்தில் குல்தீப் யாதவ் (3) ரன்அவுட் ஆக, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது. உம்ரான் மாலிக் (2) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி, டிக்னர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 386 ரன்கள் என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது.