புதுடில்லி:குடியரசு தின விழாவை முன்னிட்டு, தலைநகர் டில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநகர் முழுதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுடில்லி மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சர் அரோரா வெளியிட்டு உள்ள அறிக்கை:
குடியரசு தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளும், பயங்கரவாதிகளும் அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம்.
எனவே, ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள், பாரா கிளைடர்கள், பாரா மோட்டார்கள், ஏர் பலூன்கள் ஆகியவற்றை புதுடில்லி வான்பகுதியில் பறக்கவிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிப்.15- வரை 29 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும். தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு மாநகர் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், பல இடங்களில் தற்காலிக சாவடி அமைத்து வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குடியரசு தின அணிவகுப்பில் முற்றிலும் இந்திய தயாரிப்பு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 21 குண்டுகள் முழங்க பழமையான 25 பவுண்டர் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், இந்திய தயாரிப்பான 105 எம்.எம். ரக பீரங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த எம்.எம். ரக பீரங்கிகள், 1972-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டவை. கான்பூர் மற்றும் ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலைகளில் இவை தயாரிக்கப்பட்டு, 1984-ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்க்கப்பட்டன.
ஹரியானாவில் தீவிர கண்காணிப்பு: குடியரசு தினத்தை முன்னிட்டு ஹரியானா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஹரியானா மாநில டி.ஜி.பி., பி.கே. அகர்வால் கூறியதாவது:
மாநிலம் முழுதும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து சாலைகளிலும் வாகன சோதனை நடத்தப்படுகிறது.
குடியரசு விழா நடக்கும் இடத்துக்குச் செல்லும் சாலைகளில் நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்து சுமுகமாக செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
உரிமை கோரப்படாத வாகனங்கள், பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் குறித்து பொதுமக்கள் போலீசுக்கு உடனே தகவல் அளிக்க வேண்டும்.
மாநிலம் முழுதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில்கள் மற்றும் பொதுப் போக்குவரத்திலும் சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மக்கள் அதிகமாக கூடும் சந்தைகள், பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள், விருந்தினர் மாளிகைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் உணவகங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.