புதுடில்லி:ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., கவுன்சிலர்களின் கடும் அமளி காரணமாக மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடத்தப்படாமலேயே புதுடில்லி மாநகராட்சி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
புதுடில்லி மாநகராட்சி தேர்தல் டிச.4ல் நடந்து 7ல் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. மொத்தம் 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134, பா.ஜ., 104, காங்கிரஸ் 9 இடங்களைக் கைப்பற்றின. மூன்று வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
தேர்தலுக்குப் பின் முதல் கூட்டம் கடந்த 6ம் தேதி நடந்தது. அப்போது, தற்காலிக தலைவராக சத்ய சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள் பொறுப்பேற்பதற்கு முன், துணை நிலை கவர்னரால் நியமிக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், புதுடில்லி மாநகராட்சி கூடியதும், துணை நிலை கவர்னரால் நியமிக்கப்பட்ட 10 கவுன்சிலர்கள் முதலில் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதைக் கண்டித்த ஆம் ஆத்மி கவுன்சிலர்கள், 'அவமானம்... அவமானம்...' என, கோஷமிட்டு அமளி செய்தனர்.
இதைத் தொடர்ந்து, நியமன கவுன்சிலர்கள் 'ஜெய் ஸ்ரீராம்... பாரத் மாதா கி ஜெ...' என கோஷமிட்டனர். மேலும், ஆம் ஆத்மி கவுன்சிலர்களுக்கு முன் நின்று, ' மோடி... மோடி...' எனவும் முழக்கமிட்டனர்.
இதைத் தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்ற 250 கவுன்சிலர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதையடுத்து, இரு கட்சி கவுன்சிலர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம், அமளி ஏற்பட்டது.
இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. முதலில், 15 நிமிடங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் கூடியபோதும் அமளி தொடர்ந்ததால், நாள் முழுதும் சபை ஒத்திவைக்கப்படுவதாக தற்காலிக தலைவர் சத்ய சர்மா அறிவித்தார்.
பரபரப்பான சூழ்நிலை யில், இன்று மீண்டும் கூடும் மாநகராட்சியில் மேயர் தேர்தல் நடக்குமா என பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துஉள்ளது.
நேற்று நடந்த கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தேர்தலில் ஓட்டுப் போடும் தகுதி பெற்றிருந்த லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
ஆனால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேயர் தேர்தல்
புதுடில்லி மாநகராட்சியில் அதிக இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றி இருந்தாலும், தேர்தலில் வென்ற 250 கவுன்சிலர்கள் தவிர, புதுடில்லியின் ஏழு லோக்சபா எம்.பி.,க்கள், மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்கள், 14 எம்.எல்.ஏ.,க்களும் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் ஓட்டுப் போடும் தகுதி பெற்றுள்ளனர்.
இதில், ஒரு பா.ஜ., - எம்.எல்.ஏ., 13 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை நியமித்து புதுடில்லி சட்டசபை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராய் மற்றும் ஆஷு தாக்குர், பா.ஜ., சார்பில் ரேகா குப்தா ஆகியோரும், துணை மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி சார்பில், ஆலே முகமது இக்பால் மற்றும் ஜலக் குமார், பா.ஜ., சார்பில் கமல் பக்ரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேயர் மற்றும் துணை மேயர் தவிர, மாநகராட்சியின் ஆறு நிலைக்குழுக்களுக்கான தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
புதுடில்லி மேயர் பதவி ஐந்து ஒற்றை ஆண்டுகளுக்கு சுழற்றி முறையில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஆண்டு பொதுப் பிரிவினர், மூன்றாவது ஆண்டு ஆதிதிராவிடர், அடுத்த இரண்டு ஆண்டுகள் மீண்டும் பொதுப்பிரிவினர் மேயர் பதவி வகிப்பர். இதனால், ஒவ்வோர் ஆண்டும் மேயர் தேர்தல் நடக்கும்.
ராணுவ பாதுகாப்பு
மாநகராட்சியில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலை முன்னிட்டு நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மாநகர போலீஸ் மட்டுமின்றி துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரும் மாநகராட்சி வளாகத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.