காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாலை, விழுப்புரம், திருச்சி, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் மற்றும் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்லும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், நகர பேருந்துகளுக்கான நேரக்காப்பாளர் அறை அருகில், 7 லட்சம் ரூபாய் செலவில், 2018 ல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் திறக்கப்பட்டது.
குடிநீர் வழங்கும் மையத்தில் உள்ள குடிநீரை, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியரும், நடைபாதை, தள்ளுவண்டி வியாபாரிகளும், பஸ் ஓட்டுநர், நடத்துனர்களும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சில தினங்களுக்கு முன் பழுதடைந்தது. பழுதடைந்த இயந்திரத்தை மாநகராட்சிநிர்வாகம் சீரமைக்கவில்லை. இதனால், குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க வரும் பயணியர், தண்ணீர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதனால், பணம் செலவழித்து கடைகளில் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பழுதடைந்த சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது நீக்கி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தை பயன்பாடிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.