சென்னை:விதியை மீறி ரயில் பாதையை கடப்பதால், சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த ஆண்டில் மட்டும் 1,836 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு, 'மொபைல் போன்' பேசியபடியே, ரயில் பாதையில் நடந்து செல்வது தான் முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
ரயில் விபத்துகள் மற்றும் ரயில்வே 'கிராசிங்' விபத்துகள் என்று இரண்டு வகையாக, ரயில்வேயில் விபத்துகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், ரயில்களின் இயக்கத்தால் ஏற்படும் விபத்தும் இறப்பும் குறைந்து வருகிறது.
விதிமீறல்கள்
ஆனால், ரயில்வே பாதுகாப்பு விதிகளை மீறி, ரயில் பாதையை கடப்பது, மொபைல் போன் பேசியபடியே ரயில் பாதைகளில் நடந்து செல்வது, 'சிக்னல்' விதிகளை மீறுவது, ஓடும் ரயில் அருகே 'செல்பி' எடுப்பது உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
தெற்கு ரயில்வேயில், சென்னை கோட்டம் என்பது விழுப்புரம், ஜோலார்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலம் கூடூர் வரை உள்ளது.
சென்னையை இணைக்கும் முக்கியமான புறநகர் மாவட்டங்களாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் இருப்பதால், ரயில் பயணியர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
3,800 பேர்
இது குறித்து, சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் நிலையங்களில் இருக்கும் சுரங்கப்பாதை, நடை மேம்பாலங்களை பயன்படுத்தாமல், பாதுகாப்பு விதியை மீறி ரயில் பாதையை கடந்து செல்கின்றனர். சமீப காலமாக மொபைல் போனை பயன்படுத்தியபடியே ரயில் பாதையை கடப்பதால் ஏற்படும் விபத்துகள் அதிகம்.
சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், விதி மீறி ரயில் பாதையை கடந்து சென்றதால், ரயில் மோதியதில், 2020ல் 437 பேர்; 2021ல், 1357; 2022ல், 1836; 2023ல் இதுவரையில் 170 என 3,800 பேர் இறந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.