முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வ.உ.சிதம்பரம் பிள்ளையின், 150-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, தமிழக அரசு வெளியிட்ட சிறப்பு மலரின் முதல் பக்கத்தில், வ.உ.சி., படத்துடன், அவரது ஒரிஜினல் கையெழுத்திலுள்ள, 'பிள்ளை' என்ற சொல் நீக்கப்பட்டு, அச்சிடப்பட்டுள்ளது. மெத்தப் படித்த அரசு அதிகாரிகள், இதற்கு சொல்லியுள்ள காரணம், அது, ஜாதி பெயராம்!
அட அறிவாளிகளே... தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு, நன்கு பரிச்சயமானது, 'கோனார் நோட்ஸ்!' திருவள்ளுவர் முதல் திரு.வி.க., வரை, பலரையும் மாணவர்கள் அறிந்து கொண்டது, கோனார் நோட்ஸ் என்ற புட்டிப் பால் வழியாகத் தான் என்றால் மிகையில்லை. காலம் காலமாக, சங்க இலக்கியம் தொட்டு, சமீபத்திய இலக்கியம் வரை மாணவர்களுக்கு போதித்து வந்த, அந்த கோனார் நோட்சில், ஜாதி பெயரான கோனார் உள்ளது என்பதற்காக, அந்த வார்த்தையை நீக்கி விட்டு, வெறும் நோட்ஸ் என்றா கூறுவீர்கள்?
அப்படிக் கூறினால், அது முட்டாள்தனம் அல்லவா? கோனாரும், நோட்சு-ம் இரட்டைக்கிளவி; பிரிக்க முடியாது; பிரித்தால் பொருளில்லை. அது போலவே பிரபல துணிக்கடை, 'நாயுடு ஹால்!' அதிலுள்ள நாயுடுவை நீக்குவீர்களா சிகாமணிகளே... எங்கே போய் முட்டிக் கொள்வது? நாட்டில் எத்தனையோ வேலைகள் இருக்க, பழமொழி ஒன்றில் சொல்வது போல, வேலை இல்லாதவன் செய்யும் வெட்டி வேலையை, தி.மு.க., அரசு செய்து கொண்டிருக்கிறது.
முந்தைய தலைவர்களுக்கு, அவர்களின் ஜாதி பெயர்களே அடையாளம். அவர்களை குறிப்பிடும் போது, 'பிள்ளைவாள்' என்றோ, 'முதலியார்வாள், ஐயர்வாள்' என்று தான் மரியாதையாக குறிப்பிடுவர்; அதில், உங்களுக்கு என்ன மோசம் போச்சு?
ஒரு பக்கம், ஜாதி பெயரை நீக்கும் இந்த திரிசமம்; மற்றொரு புறம், கட்சி நிர்வாகிகளின் ஜாதியை கணக்கெடுக்கச் சொல்லி, முதல்வர் உத்தரவு; ஏன் இந்த இரட்டை வேடம்? அதாவது, உங்களுக்கு சாதகமான விஷயங்களில் ஜாதி வேண்டும். அப்படித்தானே, முதல்வர் அவர்களே...
ராமாயணத்தையும் படிக்க வேண்டும், கோவிலையும் இடிக்க வேண்டும்; அதுதானே உங்கள் பாலிசி. உங்களின் அரை வேக்காட்டு, 'பிள்ளை' தமிழ் விளையாட்டை, ஊருக்கும், நாட்டுக்கும் உழைத்த பெரியோரிடம் காட்ட வேண்டாமே... தன் முடியே தன் அடையாளம் என்கிறாள், விளம்பரத்தில் ஒரு பெண். தலைமுடியே அடையாளம் என்கிற பொழுது, தலைமுறைகளின் அடையாளமான ஜாதிப்பெயரை, தலைவர்கள் தாங்கி நின்றால் என்ன கெட்டு விடும்?
ஜாதி ஒழிப்பை மேடையில் பேசுபவர்கள் கூட, தங்கள் பிள்ளைகளுக்கு ஜாதி பார்த்து தான் மணமுடிக்கின்றனர். உங் களின் பகுத்தறிவு பகலவன், ஈ.வெ.ரா., முதலில், ராமசாமி நாயக்கராகத் தானே இருந்தார். ஜாதியோ, மதமோ பெயரில் இல்லை; மனதில் உள்ளது. புரிந்து கொள்ளுங்கள்.
'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்றான், அன்றைய எட்டயபுரத்து இலக்கியவாதி; 'ஜாதிகள் உள்ளதடி' என்கிறார், இன்றைய கோபாலபுரத்து அரசியல்வாதி.
சாஸ்திரி வழியில் வீறுநடை போடுவோம்!
ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஜவஹர்லால்
நேருவுக்கு பின், இரண்டாவது பிரதமராக பதவியேற்று, நாட்டை வழிநடத்திச்
சென்றவர், லால்பகதுார் சாஸ்திரி. சிறு வயதில் இருந்தே, சுதந்திரப்
போராட்டத்தில் பங்கேற்று, பல இன்னல்களை சந்தித்தவர்; சிறையில் வாடியவர்;
எந்த சந்தர்ப்பத்திலும் நேர்மை, நியாயத்தை விட்டுக் கொடுக்காதவர். அவர்
வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள், நம் அனைவருக்கும் பாடம்!
அதில் சிறிதாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்...
கடந்த,
1963ல், லால்பகதுார் சாஸ்திரி அமைச்சர் பொறுப்பில் இருந்து
நீக்கப்பட்டிருந்த நேரம். ஒரு முறை வீட்டில் இருட்டில் அமர்ந்திருந்தார்.
பெரிய குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய, பெரும் பொறுப்பு அவருக்கு இருந்தது.
அந்த நேரத்தில், அவரின் நண்பர், சாஸ்திரி இருட்டில்
அமர்ந்திருப்பதை பார்த்து, 'என்ன ஆனது?' என்று வினவ, அவர் அமைதியாக,
'ஒன்றுமில்லை... இப்போது நான் அமைச்சருமில்லை; எம்.பி.,யும் இல்லை. மின்
கட்டணத்தை நான் தானே கட்டியாக வேண்டும்.
'வயிற்றுப்பாட்டுக்கே
கஷ்டமாக இருக்கறப்போ, மின் கட்டணத்தை குறைத்துக் கொள்ள வேண்டாமா... அது
தான் இப்படி இருட்டில் உட்கார்ந்திருக்கிறேன்; இனி, தேவைப்படும் போது
மட்டும், மின்சாரத்தை உபயோகிக்கலாம் என, நினைக்கிறேன்' என்றார்.
'ஜெய்
ஜவான், ஜெய் கிசான்!' என்ற தேசிய முழக்கத்தின் தந்தை அவர்! ஒரு நாட்டின்
பாதுகாப்பிலும், வளர்ச்சியிலும், இரு கண்களாக இருப்பவர்கள் ராணுவ
வீரர்களும், விவசாயிகளும் தான் என்பதே, இம்முழக்கத்தின் கருத்து.
இந்தக் குடியரசு தின நாளிலாவது, இவரை போன்ற உத்தமர்களின் உயர்வான வாழ்வை,
மனதில் ஏற்போம்; நாட்டுப்பற்றுள்ள குடிமகனாக, சாஸ்திரி அவர்கள் காட்டிய
வழியில் வீறு நடை போடுவோம்; இவரைப் போன்றோர் வாழ்ந்த புண்ணிய பூமியில்,
நாம் வாழ்வதே நமக்கு கிடைத்த பெருமை என்பதை உணர்வோம்!
முதல்வருக்கே குழி பறிப்பர்!
வி.பத்ரி,
ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ- - மெயில்'
கடிதம்:
---------------------------------------------------------------வடசென்னையில்
சமீபத்தில் நடந்த, தி.மு.க., பொதுக் கூட்டத்தில் பேசிய, அக்கட்சியின்
அமைப்புச் செயலர், ஆர்.எஸ்.பாரதி, கவர்னரை தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.
அத்துடன்,
'சட்டசபையில் முதல்வர் சற்று கண்ணசைவு காட்டியிருந்தால், அங்கிருந்து
கவர்னர் உயிரோடு போயிருக்க மாட்டார். சட்டசபையில் கொலையே நடந்தாலும்,
யாரும் எதுவும் செய்ய முடியாது' என்று, ஒரு பேட்டை ரவுடி போல
கூச்சலிட்டுள்ளார்.
இவர் மட்டுமல்ல... தி.மு.க.,வில் முக்கிய
பொறுப்பிலுள்ள பலரும், ஆர்.எஸ்.பாரதி போன்றே வன்முறையை துாண்டும் விதமாகப்
பேசுவதை, முதல்வர் கண்டிக்காமல் வேடிக்கைப் பார்ப்பது ஏன் என்று
தெரியவில்லை.
கவர்னருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் தலைவர்களை
கொண்ட இந்த அரசால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க முடியும்...
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த யாராவது, தி.மு.க., தலைவர்களை பார்த்து இப்படி
வன்முறையாகப் பேசியிருந்தால், முதல்வர் சும்மா இருந்திருப்பாரா... இதற்கு
பெயர் தான், நடுநிலை அரசா?
முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த
விடுதலைப் புலிகளை, இன்னமும் ஆரத்தழுவி ஆதரவுக்கரம் நீட்டி வரும்,
தி.மு.க.,வில், ஆர்.எஸ்.பாரதி போன்ற வன்முறை பேச்சாளர்கள் இருப்பதில்
வியப்பில்லை!
ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு முடிவுரை எழுத,
ஆர்.எஸ்.பாரதி போன்ற, நான்கு பேச்சாளர்களே போதும்; முதல்வருக்கு ஆதரவாக
பேசுவதாக நினைத்து, அவருக்கே குழி பறித்து விடுவர்!